
கோவாவில் வேறொருவடன் தகாத உறவு வைத்திருந்த மனைவியை கடலில் மூழ்கடித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
கோவாவை சேர்ந்த பிரபல ஓட்டல் மேலாளர் கவுரவ் கட்டியார் (29), தனது மனைவி தீக்ஷா கங்வாரை (27) நேற்று கபோ டி ராமா கடற்கரைக்கு அழைத்து சென்றார். இந்த நிலையில் மனைவியுடன் கடலில் குளிக்க சென்ற கவுரவ் கட்டியார், திடீரென தீக்ஷா கங்வாரை கடலுக்குள் அழுத்தினார். அப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு தீக்ஷா கங்வார் உயிரிழந்தார்.
பின்னர் கடற்கரைக்கு ஓடிவந்து, அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசிடம், தனது மனைவி குளித்துக் கொண்டிருந்த நோது நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக கூறினார். உஷாரான போலீசார், உடனடியாக மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தினர். கடலில் மூழ்கியிருந்த தீக்ஷா கங்வாரின் உடலை மீட்புக் குழுவினர் மீட்டனர். அதன்பின் கடற்கரை பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது கவுரவ் கட்டியார், தனது மனைவி தீக்ஷா கங்வாரை கடலுக்குள் மூழ்கடித்து கொன்றது தெரியவந்தது. அதையடுத்து கவுரவ் கட்டியாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தீக்ஷா கங்வாருக்கும், வேறொரு நபருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இதனை கவுரவ் கட்டியார் கண்டித்துள்ளார். இருந்தும் அந்த நபருடன் தீக்ஷா கங்வார் தொடர்ந்து உறவில் இருந்து வந்தார். இருவருக்கும் திருமணமாகி ஓராண்டான நிலையில், தற்போது கள்ளத் தொடர்பு விவகாரத்தால் தனது மனைவியை கடலில் மூழ்கடித்து கொன்ற கணவன் கவுரவ் கட்டியாரை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.


