சொத்துக்காக உடன் பிறந்த தம்பியை கொலைசெய்தவழக்கில் அண்ணனை 7 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கரடிகுளம் ஆவுடையார்புரம்பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மர்மநபர்களால் கொலை செய்து சாக்கில் கட்டி கிருஷ்ணாபுரம் பெரியகுளம் கால்வாய்பாலத்திற்கு கீழ் போட்டுள்ளார். இது பற்றி காவல்துறையினக்கு தகவல் கிடைத்ததும் விரைந்து வந்து உடலை கைப்பற்றி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் குற்றவாளி பற்றி எந்தவித துப்பும் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் அப்போதைய கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் மாடசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் .
இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் தென்காசி மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் அறிவுறுத்தலின்பேரில் கடையநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜா வழிகாட்டலின் படி சார்பு ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் விஜய பாண்டியன் சங்கர் மாடசாமி உள்ளிட்டகாவல்துறையினர் குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கரடிகுளம் பகுதியை சேர்ந்த வெள்ளத்துரை என்பவர் கடந்த சில மாதங்களாக ஊரில் வசிக்கவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரை பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கரடிகுளம் பகுதியில் அவர் வந்திருப்பதாகவும் வீட்டில் இருப்பதாகவும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் விரைந்து சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும் காவல் நிலையம் கொண்டு வந்து காவல்துறை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. காவல்துறை விசாரணையில் வெள்ளத்துரையும் இந்த கருப்பையாவும் அண்ணன் தம்பி என்பதும் இருவருக்கும் சொத்து பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு சொத்து பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தவுடன் வெள்ளத்துரை அவரது தம்பி கருப்பையாவை தோட்டத்திற்கு வரவழைத்துள்ளார். வந்த இடத்தில் மீண்டும் சொத்து தகராறு ஏற்பட்டதாகவும் இதில் கோபம் அடைந்த வெள்ளத்துரை தம்பி கருப்பையாவை கை கால்களை கட்டி அங்கே கிடந்த கம்பால் தலையில் பலமாக அடித்து கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கிருஷ்ணாபுரம் பெரியகுளம் கால்வாய் பாலத்திற்கு அடியில் வீசியதாகவும் காவல்துறையிடம் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர் .
இதனை தொடர்ந்து காவல்துறையினர் வெள்ளத்துரையை கைது செய்தனர்.மேலும் இச்சம்பவம் தொடர்பாக அவரை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர் . மேலும் சொந்த தம்பியை சொத்துக்காக கொலை செய்த அண்ணன் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்ட சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துரிதமாக செயல்பட்டு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியை கைது செய்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் புளியங்குடி உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். கடையநல்லூர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் ஏழாண்டுக்கு பிறகு குற்றவாளியை கைது செய்த காவல்துறையின் இச்செயலை பாராட்டி வருகின்றனர்.
