சபரிமலை:
கேரளா தவிர்த்த பிற மாநிலங்களிலிருந்து சபரிமலை வரும் பக்தர்கள் பம்பையில் குளித்து விட்டுத் தங்களது ஆடைகளை நதியில் விட்டுச் செல்கின்றனர். இப்படியொரு ஐதீகம், சபரிமலை பயணத்தில் இல்லை என்று தந்திரிகளும், தேவசம் போர்டும் தொடர்ந்து கூறி வருகின்றன.
இந்த ஆண்டு சீசனில் தொடக்கம் முதலே தமிழ், தெலுங்கு, கன்னட, ஆங்கில மொழிகளில் ஆடைகளை நதியில் விட்டுச் செல்ல வேண்டாம் என்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. எனினும், தினந்தோறும் ஆயிரக்கணக்கான வேட்டிகளும், துண்டுகளும் குவிகின்றன; இதனால், பம்பை நதி வேகமாக மாசுபடுகிறது.
திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்ட ஹரிஹர கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனம், இந்த ஆடைகளை அப்புறப்படுத்தும் ஒப்பந்தத்தை எடுத்துள்ளது. 10 நாட்களில் மட்டும் ஒரு லாரி அளவிற்கு ஆடைகள் எடுத்துச் செல்லப்பட்டு உள்ளன. இங்கு எடுக்கப்படும் வேட்டி உள்ளிட்ட ஆடைகள் எருமேலிக்கு எடுத்துச் சென்று அங்கே உலர வைத்தபின், சென்னையில் ஒரு நிறுவனத்துக்குக் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
‘ஆடைகளைப் பம்பை நதியில் வீசிச் செல்பவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட அம்சங்களை யோசிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது’ என, தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறியுள்ளார்.