Armstrong Murder case:5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்!

Advertisements

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாகப் பொன்னை பாலு, ரவுடி திருவேங்கடம் உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் போலீசார் பிடியிலிருந்து தப்பியோடிய கொலையாளி திருவேங்கடம் பிடிக்கச்சென்ற போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்றார். போலீசார் தற்காப்புக்காகத் திருப்பிச் சுட்டபோது, குண்டுகள் பாய்ந்து திருவேங்கடம் பலியானார்.

தொடர்ந்து இந்தக் கொலையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பராக அறியப்படும் ரவுடி சீசிங் ராஜாவைப் போலீசார் ஆந்திராவில் கடந்த 22-ம் தேதி கைது செய்தனர். அவரைச் சென்னை அழைத்து வந்த நிலையில், நீலாங்கரையில் வைத்துப் போலீசாரை தாக்கிவிட்டு அவர் தப்ப முயன்றார். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ரவுடி சீசிங் ராஜா சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசார் தாக்கல் செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 28 பேரில் 25 பேர்மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *