Suicide: பெற்ற மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை!

Advertisements

புளியந்தோப்பில் மன வளர்ச்சி குன்றிய 14 வயது தனது குழந்தையை கொலை செய்து விட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புளியந்தோப்பு பட்டாளம் ஜெய் நகர் 1வது தெருவை சேர்ந்தவர் காயத்ரி 35 .  இவர் கடந்த இரண்டு வருடங்களாக தனது மகள் மைத்ரா 14 என்பவர் உடன் வாழ்ந்து வந்துள்ளார். மைத்ரா சற்று மனநலம் குன்றியவர். காயத்திரிக்கு சிவக்குமார் என்ற நபருடன் திருமணமாகி கடந்த 2012 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனது.

அதன் பிறகு இவர் தேங்காய் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்யும் வேலை செய்து வந்துள்ளார். கணவர் பிரிந்தவுடன் புரசைவாக்கம் தாக்கர் தெருவை சேர்ந்த முகமது அப்ரான் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு அவரை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு முகமது அப்ரான் வந்தவாசியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருடன் குடும்பம் நடத்த ஆரம்பித்துள்ளார்.  இவர்கள் வில்லிவாக்கம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். இந்த விஷயம் காயத்ரிக்கு தெரியவந்துள்ளது. அவர் முகமது அப்ரானிடம் கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால்  கடந்த சில நாட்களாகவே காயத்ரி மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் மனநிலை பாதிக்கப்பட்ட தனது குழந்தையை இனிமேல் வைத்து பார்த்துக் கொள்ள முடியாது என்ற சூழலுக்கு வந்த காயத்ரி இன்று மதியம் தனது குழந்தைக்கு விஷம் கலந்த உணவை கொடுத்துவிட்டு தானும் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இரவு எட்டு மணி அளவில் காயத்ரியின் தங்கை  வீட்டிற்கு வந்து கதவை தட்டி உள்ளார். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை.  அக்கம் பக்கத்தினர் புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர், புளியந்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து பார்த்த போது காயத்ரி மற்றும் அவரது 14 வயது மகள் இருவரும் உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர், உடனடியாக இருவரின் உடலையும் மீட்ட புளியந்தோப்பு போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *