
மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் கொடூர தாக்குதல்: தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிசூடு; குழந்தைகள் உள்பட 70 பேர் பலி- 150 பேர் காயம்.
மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 6 ஆயிரம் பேர் பங்கேற்ற இசை நிகழ்ச்சியில் தீவிரவாதிகள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த கொடூர தாக்குதலில் குழந்தைகள் உட்பட 70க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 150 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா உளவு நிறுவனத்தின் ஆதரவு பெற்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்று உள்ளது.
இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் அமோக வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றார்.
200 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தொடர்ச்சியாக 3வது முறையாக அதிபராகி ஸ்டாலினின் சாதனையை அவர் முறியடித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலைஇந்த கோரத் தாக்குதல் நடந்துள்ளது. ரஷ்யாவில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக இது அறியப்படுகிறது.
மாஸ்கோவின் மேற்குப் பகுதியில் உள்ள க்ரோகஸ் நகரின் மையத்தில் 6200 பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட இசையரங்கில்தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
துப்பாக்கி சூடு; தீவைப்பு
சம்பவத்தின் போது அங்கு ரஷ்ய பேண்ட் இசைக் குழுவான ‘பிக்னிக்’ குழுவின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென தீவிரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுகள் பாய பலர் சரிந்து விழுந்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத இசை ரசிகர்கள் அலறி எடுத்து ஓடினார்கள். சிலர் இருக்கைகளுக்கு அடியில் பதுங்கி தப்பிக்க முயன்றனர்.
அரங்கில் எங்கு பார்த்தாலும் ஒரே மரண ஓலமாக காட்சி அளித்தது. சீறிப்பாயும் துப்பாக்கி குண்டுகளுக்கு நடுவில் பலர் உயிருக்கு பயந்து தப்பி ஓடுவதையும் பார்க்க முடிந்தது.
துப்பாக்கிச் சூடு நடத்தியது மட்டுமல்லாது அரங்குக்கு பயங்கரவாதிகள் தீவைத்தும் சென்றனர்.
இதனால் இசை அரங்கின் ஒரு பகுதியில் தீப்பற்றிக் கொண்டு கரும்புகை பரவத் தொடங்கியது.
தகவலறிந்த காவல், தீயணைப்பு, பாதுகாப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஐ எஸ் தீவிரவாதிகள்
பொறுப்பு ஏற்றனர்
இந்த சம்பவத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 70-க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 150 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகம் ஆகலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த கொடூர தாக்குதலுக்கு அமெரிக்கா உளவு நிறுவனத்தின் ஆதரவு பெற்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. “டெலிகிராம்” செயலி மூலம் அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாஸ்கோ புறநகர் பகுதியில் மிகப் பெரிய அளவில் கோடி இருந்த மக்கள் கூட்டத்தின் மீது அதிரடி தாக்குதல் நடத்தினோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிர வைக்கும்
வீடியோ காட்சிகள்
இந்த தாக்குதலால் ரஷ்ய மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதிபர் புதின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். காயம் அடைந்தவர்களுக்கு உடனடி உதவிகளை செய்து தருமாறு அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.
இந்த நிலையில் துப்பாக்கி ஏந்திய ஐந்து ஐஎஸ் அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்ட காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் அவர்கள் இசை அரங்கில் இருந்த மக்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவதும் பலர் பிணமாக சரிவதும் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி இத்தாக்குதலை கண்டித்து எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “மாஸ்கோவில் நடந்த கொடூர பயங்கரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனைகள். ரஷ்ய அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் இத்துயரமான தருணத்தில் இந்தியா துணை நிற்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா, ஜெர்மனி உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் இந்த சம்பவத்துக்கு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். “இந்த நாள் மிகவும் கடினமானது. ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என அமெரிக்க அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ரஷ்யாவில் ஐஎஸ் அமைப்பு கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக சதி வேலைகளை அரங்கேற்ற முயற்சித்து வந்தது தெரியவந்துள்ளது.
மார்ச் 7 ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள யூத வழிபாட்டுத் தளத்தில் நடக்கவிருந்த தாக்குதலை உளவுத்துறை முறியடித்தது. அதற்கு சில நாட்களுக்கும் முன்னதாகத்தான் ரஷ்ய பாதுகாப்புப் படை ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த 6 பேரை சுட்டு வீழ்த்தியது. இந்நிலையில் நேற்று இந்த கோரத் தாக்குதல் நடந்துள்ளது.
உக்ரைன் சதி?
இதற்கிடையில், ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் இத்தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் சதி இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆனால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் மிகைலோ போடோலியாக் இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார். உக்ரைன் ஒருபோதும் இது போன்ற பயங்கரவாதத் தாக்குதலை ஊக்குவிக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

