
சென்னை அருகே மதுரவாயலில் பேக்கரி கடையின் பூட்டை உடைத்துப் பணம்,மற்றும் செல்போன் திருடியவரைப் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், அய்யாவு நகரைச்ச் சேர்ந்தவர் சிவகுமார் அதே பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இரவு வழக்கம் போலக் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றவர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாப் பெட்டியில் இருந்த பணம் மற்றும் சிசிடிவி காட்சிகள் பதிவாகும் டிவிஆர் பெட்டி, ஒரு செல்போன் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து அவர் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரைக் கைது செய்து அவரிடம் இருந்து 4700 ரூபாய், ஒரு செல்போன், டிவிஆர் பெட்டி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
மேலும் சதீஷ் மீது 7 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளநிலையில் அவரைப் பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திப் புழல் சிறையில் அடைத்தனர்.
