Money Laundering Case: எல்.கே.சுதீஷின் மனைவியிடம் ரூ.43 கோடி மோசடி- 2 பேர் கைது!

விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீசின் மனைவியிடம் ரூ.43 கோடி மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை: சென்னை மாதவரம் பகுதியில் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீசின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமாக இடம் உள்ளது.

இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி விற்பனை செய்வதற்கு தனியார் கட்டுமான நிறுவனத்துடன் பூர்ணஜோதி கூட்டு ஒப்பந்தம் போட்டுள்ளார்.இதன்படி குறிப்பிட்ட இடத்தில் 274 வீடுகளைக் கட்டுவது என்றும் இதில் 75 வீடுகளைச் சுதீசின் மனைவியான பூர்ணஜோதியிடம் ஒப்படைத்து விடுவது என்றும் குறிப்பிடப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

கட்டுமான நிறுவனத்துடன் முறைப்படி போடப்பட்ட இந்த ஒப்பந்தங்களை மீறிக் கட்டுமான நிறுவனத்தின் அதிபர் சந்தோஷ்சர்மா செயல்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட படி 75 வீடுகளை ஒதுக்காமல் 48 வீடுகளைக் கட்டுமான நிறுவனம் போலியாகக் கையெழுத்து போட்டு வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது.

இதன்மூலம் பூர்ணஜோதியை ஏமாற்றி ரூ.43 கோடி மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இதுபற்றிப் பூர்ணஜோதி கட்டுமான நிறுவன அதிபர் சந்தோஷ் சர்மா மற்றும் உதவியாளர் சாகர் ஆகியோர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கட்டுமான நிறுவனம் மோசடியில் ஈடுபட்டிருப்பது உறுதியானது.இதைத்தொடர்ந்து சந்தோஷ் சர்மா, சாகர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *