
எப்ஸ்டீன் கோப்புகளுக்கும், அதானி மீதான வழக்கிற்கும் பயந்து, வர்த்தக ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசும் தீர்மானத்தின் கீழ், திங்கள்கிழமை உரையாற்றிய ராகுல்காந்தி, இந்தியாவை சீனா ஆக்கிரமித்துள்ளதாக, முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே எழுதிய ஒரு புத்தகத்தில் உள்ளதைக் குறிப்பிட்டுப் பேசினார்.
அப்போது எல்லைப் பிரச்னை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே, எப்ஸ்டீன் கோப்புகளில், பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங்புரி உள்ளிட்டோரின் பெயர் இடம்பெற்றிருப்பது, இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக, நள்ளிரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது என, பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கடந்த சில மாதங்களாக முடங்கிக் கிடந்த அமெரிக்க – இந்தியா வர்த்தக ஒப்பந்தம், நேற்று இரவு நரேந்திர மோடியால் கையெழுத்திடப்பட்டது. அவர் மீது கடுமையான அழுத்தம் உள்ளது என்றும், நரேந்திர மோடியின் பிம்பம் சேதமடையக்கூடும் எனவும், முக்கிய விஷயம் என்னவென்றால், நமது பிரதமர் சமரசத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இதைப்பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் நரேந்திர மோடி சமரசத்திற்கு உள்ளாகியிருப்பதால், வர்த்தக ஒப்பந்தத்தில் மக்களின் உழைப்பை விற்றுவிட்டார். அவர் நாட்டை விற்றுவிட்டார். இதனால், நரேந்திர மோடி பயப்படுகிறார் என்றும், ஏனென்றால் அவருடைய பிம்பத்தை உருவாக்கியவர்களே, இப்போது அந்தப் பிம்பத்தை உடைக்கிறார்கள் எனவும், அமெரிக்காவில் அதானி மீது ஒரு வழக்கு உள்ளது, அது உண்மையில் மோடி மீதான வழக்குதான் எனவும், எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும் வெளியிடாத பல விஷயங்கள் உள்ளன எனவும், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.



