மக்கள் மனதில் என்றும் வாழ்வார் ஆருயிர் அண்ணன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

முன்னாள் முதலவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 77 ஆகும். மு.க.முத்துவின் உடல் சென்னை ஈச்சம்பாக்கம் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.க.முத்துவிற்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிடோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது. தாய் – தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்துவிட்டேன் என்ற துயரம் என்னை வதைக்கிறது.

பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு ஆகிய படங்களின் மூலமாகத் தமிழ்நாட்டு ரசிகர் மனதில் நிரந்தரமாகக் குடியேறினார் அண்ணன் மு.க.முத்து. பல நடிகர்களுக்கு வாய்க்காத சிறப்பு அவருக்கு இருந்தது. தனது சொந்தக் குரலில் பாடல்களை இனிமையாகப் பாடும் திறனைப் பெற்றிருந்தார். ‘நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’ என்ற பாடலும், ‘சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க’ என்ற பாடலும் பலராலும் இன்றும் மறக்க முடியாத பாடல் ஆகும்.

என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அவர். எப்போது அவரைப் பார்க்கச் சென்றாலும், பாசத்துடன் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். வயது மூப்பின் காரணமாக அவர் மறைவுற்றாலும் அன்பால் எங்கள் மனதிலும், கலையாலும் பாடல்களாலும் மக்கள் மனதிலும் என்றும் வாழ்வார் அண்ணன் மு.க.முத்து. என் ஆருயிர் அண்ணனுக்கு அன்புணர்வுடன் எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன்.” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *