
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக புதிய பரபரப்பு எழுந்துள்ளது. குறிப்பாக பண்ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே வழங்கும் முன்மொழிவு வந்துள்ளதாகவும், அந்த தொகுதியிலும் உதயசூரிய சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று திமுக தரப்பு கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் , இது பற்றிய பின்னணி தகவல்களை தற்போது விரிவாக பார்க்கலாம்.. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை வழங்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் திமுக தரப்பில் அதற்கு சாதகமான பதில் வராததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில், திமுகவுடன் பல விஷயங்களில் வேல்முருகன் முரண்பட்டு வந்திருக்கிறார். இப்படி இருக்கையில், எதிர்வரும் தேர்தலில், திமுக கூட்டணியில் தொடர வேண்டும் எனில், 3-5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும், அதுவும் தனது சொந்த கட்சியின் சின்னத்தில்தான் போட்டியிடுவேன் எனவும் கூறியிருக்கிறார்.
ஆனால், திமுக 1 தொகுதியை மட்டும் ஒதுக்க முன் வந்திருக்கிறது. மட்டுமல்லாது உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று கூறியிருக்கிறது.இப்படி இருக்கையில் இன்று செய்தியாளர்களை வேல்முருகன் சந்தித்திருந்தார்.
அதில், திமுக கூட்டணியில் தொடர்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அரசியல் குழு பரிந்துரை செய்துள்ளது என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறியதில் , “கூட்டணியில் இருக்கும் எங்களுக்கு, உள்ளாட்சி தேர்தலில் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்.
கடலூர் மாநகராட்சி மேயர் அல்லது துணை மேயர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளை கேட்டிருந்தோம். ஆனால் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. இப்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. எங்களுக்கு கூடுதல் தொகுதிகளை கேட்டிருக்கிறோம். ஆனால் இதுவரை இதற்கான பதில் திமுக தரப்பிலிருந்து வரவில்லை.
ஏற்கெனவே அந்தந்த கட்சிகள் போட்டியிட்ட எண்ணிக்கையில்தான், இந்த முறையும் போட்டியிட வேண்டும் என்று திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக பேச்சுவார்த்தை குழு தெரிவித்திருந்தது. மட்டுமல்லாது கடந்த முறை ஒதுக்கிய தொகுதியிலிருந்து, இந்த முறை ஓரிரு எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள கட்சிகளை வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
நாங்கள் எங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும், குறிப்பாக தமிழ் சமூகத்திற்கு முக்கியமானதாக இருக்கும் 10 கோரிக்கைகளை நிறைவேற்றி தருவது குறித்து உறுதியளிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தோம். ஆனால், எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை” என்று கூறியிருக்கின்றார்.
இந்த சூழ்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுவது கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதல் தொகுதிகள் வழங்கப்படாததால் வேல்முருகன் திமுக கூட்டணியிலிருந்து விலகக்கூடும் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அவர் வெளியேறினால் அதிமுக – பாஜக் கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் தீவிரமாகும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன..மேலும் , தமிழக வாழ்வுரிமை கட்சியை பொறுத்தவரை, சின்னம் ரொம்ப முக்கியம் என்று நினைக்கிறது. ஒரு தொகுதியை வாங்கி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதை விட.. தனித்து சொந்த சின்னத்தில் போட்டியிடலாம் என மாவட்ட செயலாளர்கள் கொந்தளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



