உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தனா். இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணை முடிந்த பிறகு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல், கடந்த அக்டோபர் 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார். இதைத் தொடர்ந்து, அவரது நீதிமன்ற காவலை நவம்பர் 6 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, கைது செய்யப்பட்ட பிறகு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அவரது உடல்நிலையை சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.ஜெயச்சந்திரன், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடா்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு வரும் நவ.20- ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவம்பர் 6 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக மீண்டும் ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து அவரது நீதிமன்றக் காவலை நவம்பர் 22-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டிப்பது இது 10-வது முறையாகும்.
இந்த நிலையில், புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, முதற்கட்டமாக அவர் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒரு மணி நேரம் பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகு, நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஏற்கெனவே ஒருமுறை உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.