
நாமகிரிப்பேட்டை : நாமக்கல் மாவட்டத்தில் 9,551 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் பணியை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தைக் கடந்த இருவாரத்துக்கு முன்பு, சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதுமாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, அமைச்சர்கள் இலவச சைக்கிள்களை வழங்கி வருகிறார்கள். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் இந்தாண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 9,551 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. ராசிபுரம் தாலுகா மங்களபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்ற விழாவில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு, மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைத்து, 3 பள்ளிகளைச் சேர்ந்த 372 மாணவ, மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்துப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகேசன், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) குமரேசன், ஊராட்சி மன்ற தலைவர் கௌசல்யா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சரவணன், பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் ஸ்ரீகலா, அரசுத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

