
Homosexuality | Andhra Pradesh | Friend
திருமண ஆசைகாட்டி நண்பரைப் பெண்ணாக மாற்றிய வாலிபரைப் போலீசார் கைதுசெய்தனர்…
திருப்பதி: ஆந்திர மாநிலம் கிருஷ்ண லங்கா பகுதியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரராவ். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர். ஒரே மாதிரி உடை அணிதல், ஒன்றாகச் சாப்பிடுவது என இருந்து வந்தனர். இந்த நெருக்கம் இருவரிடையே தன்பாலின ஈர்ப்பை ஏற்படுத்தியது.
அடிக்கடி தனிமையில் சந்தித்து தன்பாலின சேர்க்கையில் ஈடுபட்டனர். இருவரும் வெவ்வேறு பெண்களைத் திருமணம் செய்து கொண்டால் தனித்தனியாகப் பிரிந்து விடுவோம் என எண்ணினர். இதனால் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக இருக்கலாமென நாகேஸ்வரராவ் ஆசை வார்த்தை கூறினார்.
அதன்படி நண்பர்களில் யாராவது ஒருவர் பெண்ணாக மாற வேண்டும் என்றபோது நாகேஸ்வர ராவின் நண்பர் பெண்ணாக மாற ஒப்புக்கொண்டார். இதனையடுத்து நாகேஸ்வரராவின் நண்பர் அறுவை சிகிச்சைமூலம் தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டார். பின்னர் நாகேஸ்வரராவிடம் வந்து நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றார்.
அப்போது நாகேஸ்வர ராவ் நீ அழகாக இல்லை அதனால் உன்னைத் திருமணம் செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நாகேஸ்வரராவின் நண்பர் பெண்ணாக மாறினால் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகக் கிருஷ்ண லங்கா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து நாகேஸ்வரராவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


