
பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய வசதியாகச் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
வருகிற 14-ந்தேதி பொங்கல் பண்டிகை மற்றும் அதனைத் தொடர்ந்து 15, 16-ந்தேதிகளில் மாட்டு பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
பொங்கலை சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டாட வசதியாக 17-ந்தேதி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தொடர்ச்சியாக 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்படு வதால் வெளியூர் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாகத் தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்து மொத்தம் 14,104 பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொங்கல் திருநாளை யொட்டி 10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 4 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப் படும் 8368 பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் 5736 என மொத்தம் 14,104 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னையிலிருந்து வழக்கமாக வெளியூர்களுக்கு 2092 பஸ்கள் இயக்கப்படும். இவற்றுடன் சிறப்பு பஸ்கள் கூடுதலாக விடப்படும். கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம் ஆகிய பஸ் முனையங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து 7 லட்சத்து 75 ஆயிரம் பேர் மற்ற ஊர்களுக்குப் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



