
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த ஆண்களுக்கான ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தித் தங்கம் வென்றுள்ளது.
இந்திய ஸ்குவாஷ் அணி பாகிஸ்தான் ஸ்குவாஷ் அணியை இறுதிப் போட்டியில் 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது. இதன் மூலம் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இது இந்தியாவுக்கு 10வது தங்கப்பதக்கம் ஆகும். இந்திய அணியின் அபாய் சிங் பாகிஸ்தான் வீரருக்கு எதிரான போட்டியினை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணியை முன்னிலை பெறச் செய்தார். அதேபோல் இந்திய அணியின் மற்றொரு வீரரான ஷவ்ரோவ் கோசல் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தார்.
மொத்தம் மூன்று வீரர்கள் கொண்ட அணி இரு தரப்பிலும் களமிறங்கியது. இறுதியாக வெற்றியைத் தீர்மானிக்கும் ’பெஸ்ட் ஆஃப் த்ரீ’ இந்திய அணியின் மகேஷ், பாகிஸ்தான் வீரர் நசீர் இக்பாலிடம் 8-11, 3-11 மற்றும் 2-11 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினார். அதன் பின்னர் இந்திய அணியின் ஷவ்ரவ் கோஷல் பாகிஸ்தான் அணியின் முகமது அசீமை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையிலான போட்டியில் இந்திய அணியின் ஷவ்ராவ் கோஷல் 11-5, 11-1 மற்றும் 11-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
மூன்றாவது சுற்றில் இந்தியாவின் அபாய் சிங்கும் பாகிஸ்தான் அணி சார்பில் நூர் ஜமான் களமிறங்கினர். மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்ற இறுதிச் சுற்றில், அபாய் சிங் 11-7, 9-11,7-11, 11-9 மற்றும் 12-10 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஸ்குவாஷ் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வெற்றி பெற்றது.

