
காவிரியின் குறுக்கே மேகேதாட்டில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தித் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்னுமிடத்தில் மிகப்பெரிய அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய், தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசினார்.
அப்போது, காவிரி நடுவர் மன்றம் 2007ஆம் ஆண்டு அளித்த இறுதித்தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பையும் மதிக்காமல், காவிரி வடிநிலப் பகுதிகளில் உள்ள மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், மத்திய அரசின் எந்த வகையான அனுமதியைப் பெறாமலும் மேகேதாட்டில் அணை கட்டத் திட்டமிடும் கர்நாடக அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார்.
கர்நாடக அரசின் மேகேதாட்டு அணைத் திட்டத்துக்குத் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எந்த வகை அனுமதியையும் மத்திய அரசு வழங்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
காவிரி வடிநிலப் பகுதி நீர்ப் பற்றாக்குறைப் பகுதி என்பதால் அதில் புதிய திட்டங்களை மேற்கொள்ள இயலாது என்று காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளதைச் சுட்டிக் காட்டினார்.
காவிரி வடிநிலத்தில் உள்ள பிற மாநிலங்களின் இசைவு இன்றியும், மத்திய அரசின் ஒப்புதல் இன்றியும் மேகேதாட்டில் அணை கட்டும் திட்டத்தை மேற்கொள்ளக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொண்டார்.
கர்நாடக முதலமைச்சர் சிவக்குமாருடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பேச்சு நடத்த வேண்டும் என்று தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை ஆதரித்து அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
மேகேதாட்டில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்திச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசினார்.
முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசிய பின் அது வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அவையில் உள்ள ஒட்டுமொத்த உறுப்பினர்களும் தீர்மானத்தை ஆதரித்தனர். ஒருவர் கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மேகேதாட்டில் அணை கட்டக் கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியதாகச் சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரன் அறிவித்தார்.



