
ஈழ நிலத்தில் நிகழ்த்தப்பட்ட கொடூரமான முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவு நாளை ஒட்டி, நாம் தமிழர் கட்சி சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் பிரம்மாண்ட நினைவேந்தல் மற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்காலில் உயிர்த்தியாகம் செய்த மக்களுக்கு சுடரேந்தி வீரவணக்கம் செலுத்தினர்.
மேடையில் தோன்றி வீரவணக்கம் செலுத்திய பின், வழக்கமான தனது அதிரடிப் பாணியில் சீமான் ஆற்றிய உரை, மறைமலைநகர் மைதானத்தையே அதிரவைக்கும் வகையில் அமைந்திருந்தது.
கூட்டத்தில் பேசிய சீமான், உலக நாடுகள் அனைத்தும் மௌனமாக இருந்து வேடிக்கை பார்த்த ஒரு பெரும் இனப்படுகொலையைத் தமிழினம் ஒருபோதும் மறக்காது என்று ஆக்ரோஷமாகத் தொடங்கினார்.
இரண்டு லட்சம் தமிழர்களைக் கொன்றொழித்து, உலகமே கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலை அது. உலகத்தின் எந்தப் பகுதியில் ஒரு மனிதனுக்கு அநீதி நடந்தாலும் பேசும் ஐநா சபை, ஈழத்தில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் மடிந்தபோது எங்கே போனது? உலகமே இந்தத் துரோகத்தை மறந்தாலும், இந்த நிலத்தில் வாழும் தமிழர்கள் நாம் அதனை ஒருபோதும் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்.”
தமிழகத்தின் மற்ற அரசியல் கட்சிகள் முள்ளிவாய்க்கால் துயரத்தை வெறும் தேர்தல் கால அரசியலாக மட்டுமே பார்ப்பதாகக் குற்றம் சாட்டிய சீமான், நாம் தமிழர் கட்சியின் அவசியத்தை உணர்ச்சிப்பூர்வமாக விவரித்தார்.”உங்கள் மனச்சான்றைத் தொட்டுச் சொல்லுங்கள்; நாம் தமிழர் கட்சி என்று ஒன்று இந்த நிலத்தில் இல்லை என்றால், இந்த முள்ளிவாய்க்கால் சாவைப் பற்றிப் பேச, உலக அரங்கில் அதற்காகக் குரல் கொடுக்க ஒரு நாவு தான் இந்த மண்ணில் மிஞ்சியிருக்குமா? இப்போது புரிகிறதா எதற்காக நாம் தமிழர் கட்சி உருவானது என்று? நாம் மட்டும் இந்தத் தியாகங்களைச் சுமந்து நிற்கவில்லை என்றால், இந்த இனம் நாதியற்றுப் போயிருக்கும்” என்று ஆவேசமாகப் பேசினார்.
அன்றைய காலகட்டத்தில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும், அதற்குத் துணையாக இருந்த திமுகவும் தமிழினப் படுகொலைக்கு எவ்வாறெல்லாம் மறைமுகமாக உதவின என்பதைப் பட்டியலிட்ட சீமான், “அதிகாரப் பசிக்காகத் சொந்த தொப்புள்கொடி உறவுகளைக் காவு கொடுத்த துரோக வரலாற்றை எந்தக் காலத்திலும் இந்த மண் மன்னிக்காது” என்றார்.
இறுதியாக, தேர்தல் வெற்றிகளைத் தாண்டி தமிழினத்தின் இறையாண்மையையும், கலை, கலாச்சாரம் மற்றும் உரிமைகளை மீட்டெடுப்பதே தமது இறுதி இலக்கு என்று சீமான் குறிப்பிட்டார். “தலைமுறை தாண்டினாலும் முள்ளிவாய்க்கால் நெருப்பு நமக்குள் எரிந்துகொண்டே இருக்கும். இழந்த உரிமைகளை மீட்டெடுக்கும் வரை எளிய மக்களின் இந்தப் புரட்சி ஓயாது” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
மறைமலைநகரில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தம்பிகளின் உணர்ச்சிப் பெருக்காலும், சீமானின் அனல் பறக்கும் பேச்சாலும் இந்த நினைவேந்தல் கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது..


