மன்னார்குடி அருகே ஆலங்கோட்டையில், ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில், 2-ஆயிரம் மகளிர்க்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் ஜவுளி பூங்காவிற்கு, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அடிக்கல் நாட்டி வைத்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த ஆலங்கோட்டை கிராமத்தில், 5 ஏக்கர் பரப்பளவில், ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் 2-ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், சிறு ஜவுளி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டு விழா, மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது. விழாவில், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்று, ஜவுளி பூங்காவிற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
விழாவில், சிப்காட் நிர்வாக இயக்குனர் செந்தில்ராஜ், எஸ்.சி.எம். கார்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில், சென்னை சில்க்ஸ் தொழில் உரிமையாளர் பரமசிவம், தொழில் துறை செயலர் அருண்ராய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசினார்.
அப்போது, மன்னார்குடி தொகுதிக்கு, ஏறத்தாழ ஆயிரம் கோடி மதிப்பீட்டில், பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெற்றுத் தந்ததன் அடிப்படையில், அதனை நிறைவேற்றி வருகிறோம் என்றும், 2-ஆயிரம் மகளிர்களுக்கு, வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக, எஸ். ஜி எஸ்.சி.எம். நிறுவனத்தின் மூலம், ஜவுளி பூங்காவை ஆலங்கோட்டை கிராமத்திற்கு கொண்டு வந்து இன்றைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ளார் என்றும், இதன் மூலம், ஆலங்கோட்டை மட்டுமல்லாமல், அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் பெண்கள் பயன்பெற முடியும் என்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

