
தென்னிந்திய அரசியலில் அடியெடுத்து வைத்து, குறுகிய காலத்திலேயே ஆட்சி பீடத்தில் அமர்ந்த தமிழக வெற்றிக் கழகம், இப்போது தேசிய அரசியலின் திசையை மாற்றத் துடிக்கிறதா? தில்லியின் அதிகார பீடத்தில் 2029-ல் அமரப்போவது ராகுல்காந்தியா அல்லது முதல்வர் விஜய்யா? தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி கண்டுவரும் பிரதமர் கனவை, தவெகவின் அசுர வளர்ச்சி தகர்த்து எறியப் பார்க்கிறதா?
ஆம்! தமிழக அரசியலில் தொடங்கிய விஜய்யின் பயணம், இப்போது தேசிய அளவில் காங்கிரஸ் தலைமைக்குக் கடுமையான தலைவலியை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. ராகுல் காந்தியைப் பிரதமராக முன்னிறுத்தத் துடிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, தவெக தரப்பிலிருந்து ‘இன்றைய முதல்வர்… நாளைய பிரதமர் விஜய்!’ என்ற முழக்கங்கள் ஒலிக்கத் தொடங்கியிருப்பது தேசிய அரசியலில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.. இதன் பின்னணியில் நடப்பது என்ன..? என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துள்ள தவெக, தற்போது மக்கள் நலப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.இதற்கிடையில், அக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பொது மேடைகளில் பேசும்போது, “தென்னிந்தியாவில் மட்டுமல்ல, வட இந்தியாவிலும் கூட மக்கள் விஜய்யை ஒரு தேசியத் தலைவராகப் பார்க்கத் தொடங்கிவிட்டனர்” என்று வெளிப்படையாகப் பேசி வருகின்றனர்.
இதன் வெளிப்பாடாகத் தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில், தவெகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அரசியல் களத்தில் தீயைப் பற்ற வைத்துள்ளன. அதில் “இன்றைய முதல்வர், நாளைய பிரதமர் விஜய்” என்று வர்ணிக்கப்பட்டிருப்பது, தமிழக அரசியலில் மட்டுமின்றி தில்லியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தவெகவுடன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்,”தவெகவினர் இன்னும் தங்களது ரசிகர் மன்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள்; பொறுப்பான அரசியல்வாதிகளாக மாறவில்லை” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் 2029 மக்களவைத் தேர்தலில் தேசிய அளவில் மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டணியை ஒருங்கிணைத்து ராகுல் காந்தியைப் பிரதமராக்குவதே தங்களது இலக்கு என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. தவெகவின் இந்த திடீர் தேசிய இலக்கு, மாநிலத்தில் தொடரும் திமுக-காங்கிரஸ் மற்றும் தவெக இடையேயான கூட்டணிச் சமன்பாடுகளை எந்தளவுக்குப் பாதிக்கும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியல் பக்கம் கவனத்தை திருப்பினால் ஒரு கட்சி என்னவாகும் என்பதற்கு சிறந்த உதாரணமாக பாரதிய ராஷ்டிரிய சமிதி மாறியது. இந்த சூழலில் முதலமைச்சர் விஜய் டெல்லி அரசியல் ரிஸ்க்கை எடுப்பாரா? என்ற கேள்வி எழுகிறது.




