Lok Sabha Election 2024: பிரியங்காவின் கணவர் அமேதி தொகுதியில் போட்டியா?

Advertisements

புதுடெல்லி:பிரியங்கா காந்தியின் கணவரும் தொழில் அதிபருமான ராபர்ட் வதேரா, உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸின் கோட்டையாக இருந்த அமேதி தொகுதியில் கடந்த 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் ராகுல் காந்தி தொடா்ந்து வெற்றி பெற்றாா்.

2019 மக்களவைத் தோ்தலில் சுமாா் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியை தோற்கடித்து, மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி எம்.பி.யானாா்.

தற்போதைய தோ்தலில் அமேதி தொகுதியில் பாஜக சாா்பில் மீண்டும் ஸ்மிருதி இரானி களமிறங்கியுள்ள நிலையில், இத்தொகுதிக்கு காங்கிரஸின் வேட்பாளா் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கடந்த தேர்தலில் அமைதி தொகுதியுடன் கேரளாவில் வயநாட்டிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். அமைதியில் அவர் தோல்வியைத் தழுவினாலும் வயநாட்டில் வெற்றி பெற்று எம்பி ஆனார்.

இந்தத் தேர்தலிலும் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும், அவருடைய தங்கை பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என்று உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.

ஆனால் வயநாட்டில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்த ராகுல் காந்தி அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்பட வில்லை. ராகுல் காந்தி மீண்டும் அங்குப் போட்டியிடுவாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மக்களவைக்கு ஐந்தாம் கட்ட தோ்தல் நடைபெறும் மே 20-ஆம் தேதி அமேதியில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த ராபா்ட் வதேரா, ‘ஸ்மிருதி இரானியை தோ்வு செய்ததன் மூலம் தாங்கள் செய்த தவறை அமேதி தொகுதி மக்கள் இப்போது உணா்ந்துவிட்டனா். சோனியா காந்தியின் குடும்பத்தை விமா்சிப்பதைத் தவிர, வேறெந்த பணியும் அவா் மேற்கொள்ளவில்லை.

சோனியா குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா்தான் தங்கள் தொகுதியை மீண்டும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமென மக்கள் எதிா்பாா்க்கின்றனா். நான் அரசியலில் ஈடுபட முடிவு செய்தால், அமேதி தொகுதியை தோ்வு செய்ய வேண்டுமென மக்களிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வருகின்றன. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம்’ என்று கூறியிருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரேபரேலி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த சோனியா காந்தி, தற்போது மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுள்ளாா். இத்தொகுதிக்கும் காங்கிரஸ் வேட்பாளா் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இதுகுறித்த எதிா்பாா்ப்பும் நிலவுகிறது. இங்குப் பிரியங்கா காந்தி களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ராபர்ட் வதேராவின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *