
தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்துக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகளில் 21 பேர் பாதுகாப்பாக உள்ளதாகவும், மேலும் 85 பேரைக் காணவில்லை என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
தமிழகச் சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது அமைச்சர் ராஜ்மோகன் நேபாளப் பெருவெள்ளம் குறித்து உரையாற்றினார். அப்போது, கும்பகோணம் ‘சூப்பர் யாத்ரா’ நிறுவனம் மூலம் புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 54 பேர் என மொத்தம் 57 பேர் ஆன்மீகச் சுற்றுலா சென்றுள்ளதாகக் கூறினார்.
அவர்கள் பயணித்த 3 பேருந்துகளில், நடுவில் சென்ற பேருந்து திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியதாகத் தெரிவித்தார். அதேபோலச் சென்னையின் ‘மகாதேவ் கைலாஷ் யாத்ரா’ நிறுவனம் மூலமாக 49 தமிழர்கள் நேபாளத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாகக் கூறினார்.
இதன்மூலம் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்குள்ள பல்வேறு இடங்களில் சிக்கியுள்ளதாகத் தெரிவித்தார். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமிழர்களை மீட்கத் தில்லி தமிழ்நாடு இல்ல அதிகாரிகளும், இந்திய வெளியுறவு அமைச்சகமும் நேபாள அரசுடன் இணைந்து பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.
வெள்ளத்தில் சிக்கிய ஒரு பேருந்தில் இருந்த 20 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, வேறு மாற்றுப் பாதை வழியாகத் தலைநகர் காத்மாண்டுக்கு அவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாத் தெரிவித்துள்ளார். சென்னை குரோம்பேட்டை மகாதேவ் கைலாஷ் பயண நிறுவனம் சார்பில் 49 பேர் நேபாளச் சுற்றுலாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்னர்.
இவர்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தேனி, நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். 22 ஆண்கள், 27 பெண்கள் கொண்ட இந்தக் குழுவினரில் குரோம்பேட்டையைச் சேர்ந்த கோபால் அருணாச்சலம், சரஸ்வதி இணையரும் சென்றதாக இவர்களின் மகள் பொற்செல்வி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


