
தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியர், தொழில் முனைவோர் ஆக்க வேண்டும் என்றும், சமூகநீதி என்ற பெயரில் சுரண்டுவதற்குத் துணை போகாதீர் என்றும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சித் துப்புரவுத் தொழிலாளர்களுக்குப் பணி நிலைப்பு வழங்கப்பட்டால் அவர்களும், அவர்களின் தலைமுறைகளும் தொடர்ந்து துப்புரவுப் பணியையே செய்யக் கட்டாயப்படுத்துவதைப் போலாகி விடும் என்று சிலர் யோசனை கூறியுள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்தக் கருத்துச் சொல்லப்பட்ட காலமும் சூழலும் ஐயத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிராகரித்து, அவர்களின் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டதால் தமிழ்நாடு அரசின் மீது ஒட்டுமொத்தத் தமிழகமும் கோபத்தில் இருக்கும்போது இவ்வாறு கூறியிருப்பது வினோதமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தூய்மைப் பணியாளர்களுக்குப் பணி நிலைப்பு வழங்கக்கூடாது என்று மட்டும் வலியுறுத்துவது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

