
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது. இந்தத் திட்டம் மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரானது மட்டுமல்லாமல் நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத ஒன்றாகும். ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியலமைப்பு சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராகத் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் அதேசமயத்தில் மாநிலங்களில் உள்ள அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தான் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தின் நோக்கமாகும். இதனால் அரசுக்கான செலவுகள் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நம் இந்தியாவில் புதிது அல்ல. சில மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் சேர்த்தே நடத்தப்படுகிறது. வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இவ்வாறு நடக்கும்போது பொதுமக்கள் 2 வாக்குகளைச் செலுத்த வேண்டும்.
மத்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை வலியுறுத்தி வருகிறது. இத்திட்டம் தொடர்பாக முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அந்த வகையில் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடியது. அன்றைய தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு வழங்கிய உரையைப் படிக்காமல் புறக்கணித்தார். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று நடந்த 2வது நாள் கூட்டத்தொடரில் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம், அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாகக் காரசார விவாதம் நடைபெற்றது.
இப்படியான நிலையில் 3வது நாளான இன்று தமிழக சட்டப்பேரவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிராக இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தார். தொடர்ந்து பேசிய அவர், “அதிகார பரவலுக்கு எதிரானது என்பதால் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது.
இந்தத் திட்டம் மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரானது மட்டுமல்லாமல் நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத ஒன்றாகும். ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியலமைப்பு சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று. நாடாளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நாடு முழுவதும் நடத்த முடியாத சூழல் உள்ளது. இந்தச் சூழலில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்துவது இயலாத ஒன்றாகும்” எனக் கூறினார்.


