
இஸ்ரேல் நடத்திய பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில், பயங்கரவாதிகள் என நம்பப்படும், தேடப்பட்டு வந்த பாலஸ்தீனர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
டெல் அவிவ்: இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி திடீரெனத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், இஸ்ரேலை சேர்ந்த மக்கள் 1,200 பேர் உயிரிழந்தனர். 250 பேர் பணய கைதிகளாகச் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டபோதிலும், 130-க்கும் மேற்பட்டோர் ஹமாஸ் அமைப்பின் பிடியில் உள்ளனர். ஆனால், அவர்களில் 30 பேர் மரணம் அடைந்திருக்க கூடும் என நம்பப்படுகிறது.
இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது. அவர்களை அடியோடு ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் அரசும் அறிவித்தது. தொடர்ந்து தாக்குதலை மற்றும் பயங்கரவாதிகளைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டார்.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரானது நான்கு மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெளியிட்ட செய்தியில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் உயர்மட்ட தளபதியை ஜெனின் பகுதியில் வைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை கைது செய்துள்ளது எனத் தெரிவித்து உள்ளது.
அவர், உமர் பையத் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். இஸ்ரேல் படைகளுக்கு எதிராகச் சமரியா பகுதியில் பல்வேறு துப்பாக்கி சூடு தாக்குதல்களை அவர் நடத்தி இருக்கிறார். கூடுதலாகப் பல தாக்குதல்களை நடத்தவும் அவர் திட்டமிட்டு வந்துள்ளார் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
உமரை கைது செய்யும் நடவடிக்கையின்போது, வீரர்கள் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால், அவர்கள் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், விசாரணைக்காகப் பையத், இஸ்ரேல் பாதுகாப்பு கழகத்திடம் (ஷின்பெட்) ஒப்படைக்கப்பட்டார்.
கடந்த திங்கட்கிழமை இரவில் ஜூட் மற்றும் சமரியா பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில், பயங்கரவாதிகள் என நம்பப்படும், தேடப்பட்டு வந்த பாலஸ்தீனர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதே போன்று, ஜெனின் அகதிகள் முகாமில் வீரர்கள் சோதனையிட்டபோது, சுரங்க நுழைவாயில்களையும் அதனுடன் வெடிகுண்டுகள் மற்றும் கண்ணிவெடிகளையும் கண்டுபிடித்தனர். 3 தேடப்படும் பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து சட்டவிரோத ஆயுதங்களையும் வீரர்கள் கைப்பற்றினர்.
குவால்கில்யா பகுதியில் 7 பாலஸ்தீனர்களை வீரர்கள் கைது செய்தனர். அவர்கள்மீது வாகனம் ஏற்றிக் கொல்ல முயன்ற பாலஸ்தீனர் ஒருவரை வீரர்கள் சுட்டு, கொன்றனர்.
இதே போன்றுசில்வாத் கிராமத்தில், 2 பயங்கரவாதிகளைக் கைது செய்தனர். ஏ-ராம் கிராமத்தில் 8 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர் எனத் தகவல் தெரிவிக்கின்றது.


