Thiruvananthapuram: சிறுமியின் வயிற்றில் இருந்த 2 கிலோ முடி அகற்றம்!

இரண்டு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுமியின் வயிற்றில் கத்தையாகச் சேர்ந்திருந்த முடி அகற்றப்பட்டது. அந்த முடி கத்தை 2 கிலோ எடை இருந்துள்ளது.

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி தாங்க முடியாத வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது வயிற்றில் பெரிய கட்டி போன்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்தச் சிறுமிக்கு எண்டாஸ்கோபி சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது சிறுமியின் வயிற்றில் தலை முடி கட்டி போன்று சேர்ந்திருப்பது தெரியவந்தது.

அவற்றை அகற்ற சிறுமிக்கு அறுவைசிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியின் அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் டாக்டர் ஷாஜஹான் தலைமையிலான மருத்துவர்கள் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

இரண்டு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுமியின் வயிற்றில் கத்தையாகச் சேர்ந்திருந்த முடி அகற்றப்பட்டது. அந்த முடி கத்தை 2 கிலோ எடை இருந்துள்ளது. அந்தச் சிறுமிக்குத் தலைமுடியை கடித்து சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. அவள் சிறு வயது முதலே இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார்.

அவள் கடித்து சாப்பிட்ட தலைமுடி, வயிற்றில் சேர்ந்து வந்தபடி இருந்திருக்கிறது. அதிக அளவில் முடி தேங்கி விட்டபிறகே சிறுமிக்கு வயிற்றுவலி வந்திருக்கிறது. தலைமுடியை உண்ணும் பழக்கம் கவலை மற்றும் மனஅழுத்தம் உள்ள குழந்தைகளிடம் அரிதாகக் காணப்படுவதாகவும், வயிற்றில் உள்ள உணவுடன் முடி சேர்ந்து பெரிய கட்டியை உருவாக்கும் எனவும் மருத்துவர்கள் கூறினர்.

உணவில் ஆர்வமின்மை, ரத்தசோகை, வளர்ச்சி குன்றியிருத்தல், நாள்பட்ட சோர்வு ஆகியவையே முடி உண்ணும் குழந்தைகளுக்குக் காணப்படும் அறிகுறிகள் என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *