சிகாகோ சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை:தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் முதலீடுகளையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.
சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன, இதன்மூலம் மொத்தம் ரூ.1,300 கோடி முதலீட்டில் 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனைதொடர்ந்து சான் பிரான்சிஸ்கோவிலிருந்து நேற்று சிகாகோ சென்றடைந்தார். விமான நிலையத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு அறக்கட்டளை, சிகாகோ தமிழ் சங்கம், மில்வாக்கி தமிழ் சங்கம், அறம் குழு, ப்ளூமிங்டன் தமிழ் சங்கம், அன்னை தமிழ் பள்ளி, மேடிசன் தமிழ் சங்கம் மற்றும் பியோரியா தமிழ் சங்கம் ஆகிய தமிழ்ச் சங்கங்களின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சிகாகோவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாட்டு பாடியபடி சைக்கிளில் பயணம் செய்தார். சிகாகோ நகரின் முக்கிய சாலை மற்றும் கடற்கரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் ஓட்டி சென்று மாலை பொழுதை ரசித்தார். முதல்-அமைச்சர் சைக்கிள் ஓட்டிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மாலை பொழுதின் அமைதி புதிய கனவுகளுக்கு களம் அமைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.