
தடம் பார்த்து வாழ்பவன் மனிதன்.. தடம் பதித்து வாழ்பவன் மாமனிதன்… நாம் ஒரு மாமனிதனைப் பற்றி பார்ப்போம்..
புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம் என்று தமிழ் நாட்டு மக்களால் இன்றும் , என்றூம் போற்றப்படும் தன்னிகரற்ற தலைவர் தான் நம்ம வாத்தியார் மாமனிதர் தான் எம்ஜிஆர் அவர்கள். முதலில் இவர் ஒரு சிறந்த மனிதர். ஒரு நடிகர் மக்களின் பேராதரவை பெற்று ஒரு அரசியல் தலைவராகவும், முதலைமைச்சராகவும் முடியும் என்றால் அது மிகப்பெரிய சாதனை தான்.
சோதனையில் சாதித்து காட்டிய தங்க மகன். அரசியலில் தோல்வியே காணாத வரலாறு. படுத்துக் கொண்டே ஜெயித்துக் காட்டிய ஒப்பற்ற தலைவர். அவரின் நினைவு தினம் இன்று. டிசம்பர் 24- ஆம் தேதி இவர் நம்மை விட்டு மறைந்தாலும் இவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கிறது.
அச்சம் என்பது மடமையடா.. நான் ஆணையிட்டால்.. போன்ற பாடல்கள் புகழ் பெற்றவை.
பிறப்பு:
இவர் 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தார். இவருடைய பெற்றோர் பெயர் மேலக்காடு கோபால மேனன், சத்யபாமா ஆவர். இவரின் உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். ஒரு சகோதரி, ஒரு சகோதரன். எம்.ஜி.ஆருக்கு இரண்டரை வயதான போது தந்தை மறைந்துவிட்டார். பின்னர் மகளும் இறந்து விடவே எம்.ஜி.ஆரின் தாயார் தன்னுடைய இரு மகன்களுடன் கும்பகோணத்திற்கு சென்றார்.
குடும்பத்திலோ வறுமை. சாப்பாட்டிற்கே வழியில்லை. இதில் படிப்பு எப்படி படிக்க முடியும். இருவரால் படிப்பை தொடர முடியவில்லை. இதனால் இருவரும் நாடகத்தில் நடித்து பொருள் ஈட்டி வந்தனர். நாடகத்தில் எம்.ஜி.ஆர் நடிக்கத் தொடங்கினார்.
திரைப்பயணம்:
முதன்முதலில் சதிலீலாவதி படத்தில் நடித்து நாடகத்தில் இருந்து மெதுவாக திரையில் நடித்தார். முதல் படமே நல்ல வெற்றி பெற்றது. அதற்கு பிறகு வந்த படங்கள் யாவும் இவருக்கு வெற்றியை கொடுக்க கூடியதாகவே இருந்தது.திரையில் தன்னுடைய ஸ்டைலில் அனைவரையும் அடிமைப்படுத்தினார். நாடு, மக்கள் , மகளிர் இவர்களைப் போன்ற முன்னோடியான கருத்துக்களை வசங்களாலும் பாடல்களாலும் வெளிக்கொணர்ந்தார். எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் ராஜகுமாரி. இவர் மொத்தம் 136 படங்கள் நடித்துள்ளார்.
திருமணம்:
இவருடைய முதல் மனைவி தங்கமணி என்பவர் ஆவார். உடல்நலக்குறைவால் 1942-ம் ஆண்டு தங்கமணி இறந்துவிட்டார், அவருடைய மறைவிற்கு பிறகு சதானந்தவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். 1962-ம் ஆண்டு சதானந்தவதியும் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர் அவர்கள் ஜானகி என்பவரை மணம் முடித்தார்.
அரசியல்:
அறிஞர் அண்ணா மீது உள்ள பற்றால் எம்.ஜி.ஆர் அரசியலில் இணைந்து மக்களுக்கு தொண்டுகளை ஆற்ற தொடங்கினார். சினிமாவில் இவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு காரணமாக கட்சியில் உள்ள முக்கியமான பொறுப்புகள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
முதலமைச்சர்:
அண்ணா மறைவிற்கு பிறகு கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சர் ஆனார். கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இருந்த வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் தி.மு.க-வை விட்டு நீங்கி அ.தி.மு.க எனும் புதிய கட்சியை தொடங்கினார். எம்.ஜி.ஆருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு மூலம் 1978-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சரானார்.
நலத்திட்டங்கள்:
ஆட்சிக்காலத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் பல நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். சத்துணவு திட்டம், இலவச சீருடை திட்டம், இலவச மின்சாரத் திட்டம், பெண்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இட ஒதுக்கீடு திட்டம் போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
விருதுகள்:
எம் ஜி ஆர் வாழ்க்கை வரலாறு: 1988-ம் ஆண்டு பாரத ரத்னா விருதை பெற்றார்.
கிருபானந்த வாரியார் என்பவரால் பொன்மனச் செம்மல் என்ற சிறப்பு பெயரை பெற்றார். புரட்சி நடிகர், மக்கள் திலகம், வாத்தியார், புரட்சித்தலைவர், இதய தெய்வம் என பல்வேறு சிறப்பு பெயர்களையும் பெற்றுள்ளார்.
மறைவு:
உலகத்திற்கு பல நன்மைகளை செய்த எம்.ஜி.ஆர் அவர்கள் உடல் நலக்குறைவால் டிசம்பர் 24-ம் தேதி 1987 -ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார். இவரின் இறப்பு நாட்டையே உலுக்கியது. இன்றும் இவர் பெயரில் கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் மருத்துவ பல்கலைக்கழகம் போன்றவற்றிற்கு எம்ஜிஆர் பெயர் தான் வைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரீனா கடற்கரையில் இவரது சமாதி அமைந்துள்ளது.

