Suicide: தூக்கில் தொங்கிய காதல் ஜோடிகள்!

Advertisements

திருச்சியில் மணப்பாறை அருகே 15 வயது சிறுமியும், இளைஞரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அமைந்துள்ளது கருத்தக் கோடங்கிப்பட்டி. இந்தக் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் உள்ள மரத்தில் 15 வயது சிறுமியும், இளைஞர் ஒருவரும் சடலமாகத் தொங்கியுள்ளனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதையடுத்து, உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். மரத்திற்கு கீழே ஒரு பெட்ஷீட்டும், அதில் ஒரு செல்போனும் இருந்தது. அந்தச் செல்போனில் உயிரிழந்த இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும், அதன் கீழே மிஸ் யூ ஆல் போயிட்டு வரேன் என்ற வாசகத்துடன் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனால், உயிரிழந்த இருவரும் காதலர்களாக இருக்கலாம் என்றும், தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி ஒருவர் காணவில்லை என்ற புகார் பதிவாகியிருந்தது.

கருத்தக்கோடங்கிப்பட்டியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 6ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, இவரைக் காணவில்லை என்று புத்தானத்தம் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்திருந்தார். போலீசார் விசாரணையில் இளைஞருடன் சடலமாகத் தொங்கிய சிறுமி, புகார் அளித்தவரின் மகள் என்று தெரிய வந்தது.

மேலும், அந்தச் சிறுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 19 வய்து நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்தச் சிறுமியும், அந்த நபரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். போலீசார் முதற்கட்ட விசாரணையில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பிய காரணத்தால் இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

போலீசார் தொடர்ந்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியும், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞரும் ஜோடியாகத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *