
நாம் நிறைய கோவில்களுக்கு சென்றிருப்போம்.. அதில் தாமரைக் கோவில் தனிச்சிறப்பு வாய்ந்தது.
தாமரைக் கோயில் என்பது இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ள பகாய் வழிபாட்டுத்தலம் ஆகும். அதன் தாமரை மலர் போன்ற வடிவத்தின் காரணமாக “தாமரைக் கோயில்” (கமல் மந்திர்) என அறியப்படுகிறது. இந்த பகாய் வழிபாட்டுத்தலம் தில்லியின் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது.
இந்த கட்டிடத்தில் தாமரை இதழ் போன்ற வடிவத்தில் தனித்தனியாக நிற்கும் 27 வெண் பளிங்குக் கற்களாலான அமைப்புகள் உள்ளன. இவை மூன்று சேர்ந்த ஒரு தொகுதியாக அடுக்கப்பட்டாற்போன்று ஒன்பது பக்கங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
1986 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்தத் தாமரைக்கோயிலில் சுமார் 40 மீட்டர் உயரம் கொண்ட ஒரு மத்திய மண்டபமும் அதில் ஒன்பது கதவுகளும் பொருத்தப்பட்டுள்ளன. இம்மண்டபத்தில் ஒரே நேரத்தில் 1300 பேர் அமர்ந்து வழிபாடு செய்யலாம். இது எண்ணற்ற கட்டடக்கலை விருதுகளை வென்றுள்ளது.
பின்னணி;
பாதி மலர்ந்த தாமரை இதழ்போன்ற வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தாமரைக்கோயிலானது பத்துமில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கட்டப்பட்டதாகும். 1953 இல் இந்தக் கோவிலுக்கான நிலம் கொள்முதல் செய்யப்பட்டு கோயில் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1980 ஆம் ஆண்டு இதற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டு 1986 ஆம் ஆண்டு நிறைவு செய்யப்பட்டன. 1986 டிசம்பர் 23 ஆம் நாளில் திறக்கப்பட்டு 27 ஆம் நாள் மக்களின் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. 107 நாடுகளில் இருந்து 8,000 பஹாய்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இதில் இந்தியாவில் உள்ள 22 மாகாணங்களில் இருந்து சுமார் 4,000 பஹாய்களும் அடங்குவர். ஜனவரி 1 ஆம் தேதி கோயில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது, முதல் நாளில் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டனர்.

வழிபாடு;
பஹாய் வழிபாட்டு இல்லமானது அனைத்து மதத்தினரும் கூடி, சிந்தித்து, வழிபடுவதற்கான இடமாக இருக்க வேண்டும் என்று பஹாய் நம்பிக்கை கற்பிக்கிறது. அனைத்து பஹாய் வழிபாட்டுத் தலங்களிலும் உள்ளதைப் போல, மதப் பின்னணி, பாலினம் அல்லது பிற வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் எவரும் தாமரை கோயிலுக்குள் நுழையலாம்.
சூரிய அஸ்தமனத்தில் பகாய் வழிபாட்டுத் தலம்;
தாமரைக் கோயில் உள்ளிட்ட அனைத்து பஹாய் சமய வழிபாட்டுத் தலங்களும் அவற்றின் கட்டிடக்கலை சிறப்பிற்காக நன்கு அறியப்பட்டவை. அவற்றில் சில பகாய் புனித நூல்களில் குறிப்பிட்டுள்ளது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வடிவமைப்பு;
நாட்டின் தலைநகரமான தில்லியில் உள்ள பாகாபூர் என்ற கிராமத்தில் கட்டப்பட்ட தாமரை வடிவிலான வழிபாட்டு இல்லம், இந்த வளமான பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகும். இதன் வடிவமைப்பாளர் பரிபோர்ஸ் சாபா என்ற ஈரானிய கட்டிடக்கலை வடிவமைப்பாளர் ஆவார்.
உட்கட்டமைப்புகள்;
தாமரைக் கோயிலானது, தனித்தனியாக நிற்கும் 27 பளிங்குக் கற்களாலான அமைப்புகளினால் மிதந்து கொண்டிருக்கும் பாதி திறந்த தாமரை மலர், அதன் இலைகளால் சூழப்பட்ட தோற்றத்தைக் கொடுக்கிறது. இந்த கட்டிடத்தில் ஒரு சுற்றுக்கு ஒன்பது என மூன்று தொகுதியாக அடுக்கப்பட்டாற்போன்று ஒன்பது பக்கங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
கட்டுமான அமைப்பு;
இக்கோயிலுக்குத் தேவையான 10,000 சதுர மீட்டர் பளிங்குக் கற்கள் கிரீஸிலிருந்து எடுத்து வரப்பட்டு, இத்தாலியில் கட்டுமானத்திற்கு தேவையான வடிவம், அளவில் வெட்டப்பட்டது. இந்தப் பளிங்கினை உட்புறமும் வெளிப்புறமும் இணைக்க, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட துருப்பிடிக்காத எஃகால் செய்யப்பட்ட கொக்கிகள், இணைப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
தாமரையைச் சுற்றிலும் வளைந்த நடைபாதைகள் உள்ளன. தாமரையின் மிதக்கும் இலைகளைக் குறிக்க ஒன்பது குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாமரைக்கோயிலின் வெளிப்புறமிருந்து பார்த்தால் இதன் இதழ்கள் அல்லது இலைகள் மூன்று தொகுதியாகக் காணப்படும்.

இதில் வெளிப்புறமாக திறந்தவாறு இருக்கும் இதழ்கள் ‘நுழைவிதழ்கள்’ என்று அழைக்கப்படும். இந்த அமைப்பானது ஒன்பது இதழ்கள் கொண்ட வெளிப்புற தொகுப்பாகும். தாமரைக்கோவிலின் மொத்த மின் பயன்பாட்டில் 500 கிலோவாட் மின்சாரத்தினை கட்டிடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி சேமிப்பு மின்கலன்கள் மூலம் பெறப்படுகிறது
சுற்றுலா;
1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக டெல்லியில் உள்ள பகாய் வழிபாட்டுத் தலம் திறந்து வைக்கப்பட்டது. அதுமுதல், 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை இங்கு 50 மில்லியனுக்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளனர். இதன் காரணமாக உலகில் மிகவும் அதிகமாக வருகை தரப்பட்ட கட்டடங்களில் இதுவும் ஒன்றானது. அந்த ஆண்டுகளில் அதனைப் பார்வையிட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை, ஈபிள் கோபுரம் மற்றும் தாஜ் மஹால் ஆகியவற்றின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை முந்தியது.

இந்த வழிபாட்டுத் தலம் “தாமரைக் கோவில்” எனப் பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில் கொண்டாடப்படும் இந்துப் பண்டிகையான துர்கா பூஜையின் போது தாமரைக் கோவிலில் பந்தல் அமைக்கப்பட்டு அதன் பல்வேறு உருவப்படிமங்கள் அமைக்கப்படுகின்றன.
தனிச்சிறப்புகள்;
உலகெங்கிலும் பகாய் நம்பிக்கை பின்பற்றப்படும் ஒன்பது கோவில்களில் இந்தியாவில் உள்ள தாமரைக்கோவிலும் ஒன்றாகும். தில்லியில் மிகவும் சிறந்த மற்றும் வியப்பூட்டும் கட்டுமானமாக இருப்பதால் இது தில்லியின் ஒரு அடையாளச் சின்னமாக விளங்குகிறது. அதன் கட்டிடக் கலை வடிவமைப்பிற்காகவே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளும் பல்வேறு சர்வதேச விருதுகளை இந்த கோவிலுக்கு அளித்துள்ளன.


