lok sabha session2024:பா.ஜ., ஹிந்துக்கள் வன்முறையாளர்கள்: ராகுல் சர்ச்சை பேச்சால் லோக்சபாவில் அமளி!

புதுடில்லி: ” பா.ஜ., வின் ஹிந்துக்கள் வன்முறையாளர்கள்; உண்மையான ஹிந்துக்கள் அல்ல” எனப்பேசிய ராகுலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ., எம்.பி., க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியதால் லோக்சபாவில் அமளி ஏற்பட்டது.

லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சிவபெருமான், இயேசு, குருநானக் உள்ளிட்ட படங்களைக் காண்பித்து பேசினார். அவையின் விதிப்படி எந்தவொரு மத கடவுளின் படத்தையும் காண்பிக்க கூடாது எனப் பா.ஜ., எம்.பி., க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து ராகுல் பேசியதாவது:

சிவபெருமானுடன் பிரதமர் மோடிக்கு நேரடி தொடர்பு உள்ளது. நாம் அனைவரும் பிறக்கிறோம், இறக்கிறோம். ஆனால் பிரதமர் மோடி பயாலஜிக்கலாகப் பிறக்காதவர்.

ஹிந்துக்கள் அல்ல

பிரதமர் மோடி ஒட்டுமொத்த ஹிந்து மதத்தின் பிரதிநிதி அல்ல. ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமல்ல, நமது அனைத்து மதங்களும் துணிச்சலை பற்றி, அகிம்சையை பற்றிதான் பேசுகின்றன. பா.ஜ., வின் ஹிந்துக்கள் வன்முறையாளர்கள்; உண்மையான ஹிந்துக்கள் அல்ல. ஹிந்து மதம் என்பது பயம், வெறுப்பு, பொய்களைப் பரப்பும் மதம் அல்ல. பா.ஜ., 24 மணி நேரமும் வன்முறை, வெறுப்பு ஆகியவவை பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறது. ஹிந்து மதம் அகிம்சையை போதிக்கிறது; வெறுப்பை அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

மோடி பதிலடி

இடைமறித்த பிரதமர் மோடி, ”ராகுலின் பேச்சு ஒட்டுமொத்த ஹிந்துக்களின் மீதான தாக்குதல். ஹிந்துக்களை வன்முறையாளராகக் காட்ட ராகுல் முயற்சிக்கிறார்” எனக் கண்டனம் தெரிவித்தார்.
லோச்சபாவில் ஒருவர் பேசும்போது பிரதமர் மோடி குறுக்கிட்டு பேசுவது இதுவே முதல்முறை.
பின்னர் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள், தங்களை கர்வமுடன் ஹிந்துக்கள் எனக் கூறி வருகின்றனர். ராகுல் தனது பேச்சுக்கு இந்த அவையில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். எமர்ஜென்சி காலத்தில் தேசத்தையே சிறையில் அடைத்தவர்களுக்கு அபயத்தை பற்றிப் பேசுவதற்கு அருகதை இல்லை.

டில்லியில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் காங்., ஆட்சி காலத்தில் தான் படுகொலை செய்யப்பட்டனர். அவையை இப்படி நடத்த முடியாது, ராகுலுக்கு விதி தெரியவில்லை என்றால், விதியைப் பற்றி அவருக்கு டியூஷன் நடத்துங்கள். படத்தைக் காட்டக் கூடாது என்று தெரிவித்த பிறகு மீண்டும், மீண்டும் அவர் இவ்வாறு செய்வது ஏற்புடையதல்ல. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

மன்னிப்பு

ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் கட்சி எம்.பி., க்கள் இந்திய அரசியலமைப்பு சாசனத்தை சுட்டிக்காட்டி வலியுறுத்தினர். அப்போது மீண்டும் சிவபெருமானின் படத்தை எடுத்துக் காட்டியதுடன், அயோத்தியை உள்ளடக்கிய தொகுதியில் வெற்றிபெற்ற சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.,க்கு ராகுல் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், ”அயோத்தியில் ராமர் பிறந்த மண்ணிலேயே பா.ஜ., விற்கு பாடம் புகட்டப்பட்டுள்ளது” என்றார். ராகுலின் பேச்சின்போது இடையிடையே மைக் அணைக்கப்பட்டதால், ‘மைக் கன்ட்ரோல் யாரிடம் உள்ளது? அயோத்தி என்ற பெயரைச் சொன்னவுடனே என்னுடைய மைக் அணைக்கப்பட்டுவிட்டது.’ என ராகுல் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர், ”நீங்கள் பேசுவதற்கு எழும்போது ஒருபோதும் உங்களுடைய மைக்க அணைக்கப்படுவதில்லை. இதே நடைமுறைதான் பழைய பார்லி., யிலும் சரி, புதிய பார்லி., யிலும் சரி” எனப் பதிலளித்தார்.

அயோத்தியில் மோடி

தொடர்ந்து ராகுல் பேசியதாவது: அயோத்தி அமைந்துள்ள தொகுதியில் போட்டியிட வேண்டும் என மோடி 2 முறை முயற்சி செய்தார். ஆனால், அயோத்தியில் போட்டியிட வேண்டாம், மக்கள் தோற்கடித்துவிடுவார்கள் எனக் கணிப்பாளர்கள் எச்சரித்தனர். பிரதமர் மோடி பா.ஜ., எம்.பி., க்களையே பயமுறுத்தும் விதமாக இருக்கிறார்.

ராமர் கோயில் திறந்துவைக்கப்பட்டபோது அம்பானி, அதானி மட்டுமே அங்கு இருந்தனர்; சிறு வியாபாரிகளைத் தெருவில் வீசினர். அயோத்தி மக்களின் நிலத்தைப் பறித்துவிட்டனர்; வீடுகளை இடித்து விட்டனர். கோயில் திறப்பு விழாவில் அங்குள்ள மக்கள் கூட வரவில்லை. அதனால் தான் அயோத்தி மக்கள் பா.ஜ., விற்கு நல்ல தீர்ப்பை அளித்தனர். அரசியலமைப்பு சட்டம் எதைச் சொல்கிறதோ அதன்வழியில் நடக்கிறேன். இவ்வாறு பேசினார்.

அப்போது பிரதமர் மோடி எழுந்து, ”எதிர்க்கட்சி தலைவரை நான் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என ஜனநாயகமும், அரசியல் சாசனமும் எனக்குக் கற்பித்து இருக்கிறது. ஜனநாயகத்தை பற்றியும், அரசியல் சாசனத்தை பற்றியும் ராகுலுக்கு கற்பிக்க வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *