
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றிய கிராமங்களில் அதிமுக வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எஸ். ராமச்சந்திரன் கிராமம் கிராமமாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளராகக் கலியபெருமாள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் துரிஞ்சாபுரம் ஒன்றிய கிராமங்களான நூக்காம்பாடி, மங்கலம், களஸ்தம்பாடி, வேடந்தவாடி, பூதமங்கலம், உள்ளிட்ட கிராமங்களில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான எஸ். ராமச்சந்திரன் அதிமுக வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்துத் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது நாடகக் கலைஞர்கள் எம்.ஜி.ஆர் வேடம் அணிந்தும் நடனமாடியும் மக்களைக் கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் அதிமுகவின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசூரங்களையும் பொதுமக்களிடையே வழங்கித் திமுக பொதுமக்களுக்குச் செய்த துரோகங்களையும் எடுத்துரைத்தார். அப்போது பெண்கள் அதிமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும் பட்டாசு வெடித்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரங்கநாதன், ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் சம்பத், முன்னாள் அம்மா பேரவை செயலாளர் அருள்பழனி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவுச் செயலாளர் மணிகண்டன், உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

