Lok Sabha Elections 2024: சட்டமன்ற தொகுதி வாரியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு!

Advertisements

நாடாளுமன்ற தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக ஒதுக்கீடு செய்வதற்கான முதற்கட்ட கணினி முறை ஒதுக்கீடு நடைபெற்றது, மேலும் சட்டமன்ற தொகுதி வாரியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சங்கீதா தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரதிநிதிகள் முன்னிலையில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக ஒதுக்கீடு செய்வதற்கான முதற்கட்ட கணினி முறை ஒதுக்கீடு நடைபெற்றது.

மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி, மேலூர் என 6 தொகுதிகள் மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குள் அடங்கும். அதேபோல, தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டு சோழவந்தான் (தனி), உசிலம்பட்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டு திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளும் அடங்கும். தேர்தல் வாக்குப்பதிவிற்காக 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2,751 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் வாக்குப்பதிவில் பயன்படுத்துவதற்காக முதல்நிலை சரிபார்ப்பு நிறைவேற்றப்பட்டு போதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை டாக்டர் தங்கராஜ் சாலையில் அமைந்துள்ள தேர்தல் பாதுகாப்பு கிட்டங்கியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அறிவுரையின்படி 10 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையில் 20 சதவிகிதம் கூடுதல் (Reserve) என்ற அடிப்படையில் மொத்தம் 3,303 வாக்குச் செலுத்தும் இயந்திரங்கள் (Ballot Unit), 3,303 வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Ballot Unit), 3,574 வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள் (VVPAT) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கணினி முறை ஒதுக்கீடு அடிப்படையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் பாதுகாப்பு கிட்டங்கியிலிருந்து சம்மந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் மண்டல அலுவலர்கள்மூலம் ஆயுதம் ஏந்திய காவல் பாதுகாப்புடன் அந்தந்த சட்டமன்ற தொகுதியில் உள்ள தேர்தல் பாதுகாப்பு அறைகளில் இருப்பு வைக்கப்படும். தொடர்ந்து, தேர்தல் வாக்குப்பதிவு சமயத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகள் வாரியாக ஒதுக்கீடு செய்வதற்கான இரண்டாம் கட்ட கணினி முறை ஒதுக்கீடு நடைபெற உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *