
மும்பை: கடந்த சனிக்கிழமை மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன. இதில் பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் எனச் சொல்லி இருந்தன. இந்தச் சூழலில் இந்திய பங்குச் சந்தை வாரத்தின் முதல் வர்த்தக தின, மான இன்று (திங்கட்கிழமை) உச்சத்தை எட்டியுள்ளது.
பங்கு வர்த்தகம் காலைத் தொடங்கியபோது சென்செக்ஸ் 2778 புள்ளிகளை எட்டியது. அதனால் 76,738.89 புள்ளிகள் என்ற ஆல்-டைம் உச்சத்தில் வர்த்தகமாகிறது. நிஃப்டி 50-ம் 808 புள்ளிகளாக ஏற்றம் கண்டுள்ளது. இதனால் 23,338.70 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் முதலீட்டாளர்கள் குஷி அடைந்துள்ளனர்.
இதன் எதிரொலியாகப் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள்மீதான விலை ஏற்றம் கண்டுள்ளது. அதோடு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 43 பைசா ஏற்றம் கண்டுள்ளது. அனைத்து வர்த்தகமும் இன்று ஏற்றத்தில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை தேர்தல் முடிவுகளின்போது பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றினால் பங்கு வர்த்தகம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொடும் எனத் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்தனர். குறிப்பாகப் பொதுத்துறை நிறுவனங்கள், அதானி, முகேஷ் அம்பானி நிறுவனங்களின் பங்குகள் முக்கியத்துவம் பெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று பெரும்பாலான ஊடக கணிப்பு தெரிவித்தன. இதனால், இன்றைய பங்கு வர்த்தகம் ஏற்றத்தில் காணப்படும் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். அதுவே தற்போது நடந்துள்ளது.


