
வாரணாசி :வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, அதர் ஜமால் லாரி என்பவரை வேட்பாளராக அறிவித்து இருக்கிறது.
80 மக்களவை தொகுதிகளைக் கொண்ட நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மும்முனை போட்டி நடைபெறுகிறது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி இரண்டும் பிரதான அணிகளாகும். மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் (பி எஸ் பி)கட்சி தனி அணியாகக் களம் காணுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் பி எஸ் பி கட்சி சார்பில் அதர் ஜமால் லாரி என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார்.
பி.எஸ்.பி. கட்சி இன்று 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் இவருடைய பெயரும் இடம் பெற்றுள்ளது. கடந்த 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் நடைபெற்ற 2 தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடியின் கோட்டையாக வாரணாசி திகழ்கிறது.
இந்தத் தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராகக் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இவர் கடந்த இரு தேர்தல்களில் இதே தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பெற்றவர். கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்துப் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டாவது இடம் பெற்றிருந்தார்.
தற்போது மாயாவதி கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் அதர் ஜமால் லாரி (வயது 66) வாரணாசியை சேர்ந்தவர். இவர் இதற்கு முன்பு மூன்று முறை சட்டமன்ற தேர்தல்களிலும் இரண்டு முறை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.
இவர் மாயாவதி கட்சிக்கு வருவதற்கு முன்பாக ஜனதா கட்சி, அப்பனா தளம் மற்றும் முக்தார் அன்சாரியின் குவாமி ஏக்தா தளம் ஆகிய கட்சிகளில் அங்கம் வகித்தவர். கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தர பிரதேச சட்டசபை தேர்தலுக்கு முன்பாகத் தான் லாரி பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார்.
3 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள்!
இன்று வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய லாரி “இந்தத் தொகுதியில் பிரதமர் மோடிக்கும் எனக்கும் இடையே தான் முக்கிய போட்டி இருக்கும். சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கூறினார்.
வாரணாசியில் மூன்று லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு தான் லாரி களம் இறக்கப்பட்டு இருக்கிறார். கடந்த 2009 ஆம் ஆண்டில் வாரணாசியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு எதிராக முக்தர் அன்சாரியை மாயாவதி நிறுத்தி இருந்தார். இந்தத் தேர்தலில் அன்சாரி தோல்வியைத் தழுவினாலும் ஒரு லட்சத்து 85 ஆயிரம் வாக்குகள்பற்றி இரண்டாவது இடம் பிடித்திருந்தார்.
மோடிக்கு எதிராகத் திருநங்கையான மகா மண்டலேஸ்வர் ஹேமாங்கி ஷாகி என்பவரும் அகில பாரத இந்து மகா சபா சார்பில் போட்டியிடுகிறார்.
பாஜகவுடன் மாயாவதி ரகசிய கூட்டணியா?
மாயாவதியை பொருத்தவரை மாநில சட்டமன்றத் தேர்தல் தான் முக்கியம். இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரிப்பதற்கான மாயாவதி தனித்துப் போட்டியிடுகிறார் என்றும் அவருக்கும் பாஜகவுக்கும் ரகசிய கூட்டணி இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
அதை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் அவருடைய கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு அமைந்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். ஏனென்றால் மூன்று லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்து விடக் கூடாது என்பதற்காக முஸ்லிம் ஒருவரை வேட்பாளராக நிறுத்தி வாக்குகளைச் சிதறடிப்பதே மாயாவதியின் நோக்கம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
*மாயாவதி கட்சி வேட்பாளர் லாரி மற்றும் மோடியை எதிர்க்கும் திருநங்கை வேட்பாளரும் படங்களில் இடம்பெற்றுள்ளனர்.


