Lok Sabha Election 2024: இந்திய அரசியலமைப்பை மாற்ற முயற்சி.. ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு!

வயநாடு: இந்திய அரசியலமைப்பை அழிக்கவும், மாற்றவும் ஆர்எஸ்எஸ் மற்றும் பா.ஜ., முயற்சித்து வருவதாகக் கேரளாவின் வயநாடு தொகுதியில் நடந்த ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் எம்.பி., ராகுல், லோக்சபா தேர்தலில் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா, பா.ஜ., சார்பில் மாநில தலைவர் சுரேந்திரன் போட்டியிடுகின்றனர்.
இன்று (ஏப்.,16) வயநாடு தொகுதிக்கு உட்பட்ட கோடியத்தூர் பகுதியில் ராகுல் ‘ரோடு ஷோ’வில் பங்கேற்றார். காங்கிரஸ் தொண்டர்கள் அவரது காரைச் சூழ்ந்துக்கொண்டு ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொண்டர்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது: இந்திய அரசியலமைப்பை அழிக்கவும், இந்திய அரசியலமைப்பை மாற்றவும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ., முயற்சித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியும் இண்டியா கூட்டணியும் அரசியல் சட்டத்தைக் காப்பாற்ற முயற்சிக்கின்றன. நரேந்திர மோடி, இந்தியாவின் மிகப்பெரிய 5, 6 பணக்காரர்களின் கருவியாக இருக்கிறார். உண்மையான பிரச்னைகளிலிருந்து இந்திய மக்களைத் திசை திருப்புவதே அவரது குறிக்கோள்.

அதனால்தான் சில சமயங்களில் கடலுக்கு அடியில் பூஜை செய்வதைப் பார்த்திருப்பீர்கள்… அதுமட்டுமல்ல, ஒலிம்பிக்கை இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் என்கிறார், நிலவுக்கு மனிதனை அனுப்பப் போகிறோம் என்று சொல்வார். ஆனால், வேலையில்லா திண்டாட்டம் அல்லது விலைவாசி உயர்வுபற்றி அவர் பேசுவதே இல்லை. மோடி, நாட்டின் பணக்காரர்களைப் பாதுகாத்து அவர்களின் வங்கிக் கடனையும் தள்ளுபடி செய்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *