M.K.Stalin Assembly:ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

திருச்சியில் ‘கலைஞர் நூலகம்’ அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை:சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. 2022-ம் ஆண்டில் ஆண்டிற்கான ஏற்றுமதி குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர்-1 மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது. உலக முதலீட்டாளர்களைத் தமிழ்நாடு தொடர்ந்து ஈர்த்து வருகிறது.

தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கு அடித்தளம் அமைக்கும் வகையிலான அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. தமிழ்நாட்டை நோக்கிப் பல்வேறு நிறுவனங்கள் தொழில் தொடங்க வந்து கொண்டு இருகின்றனர். இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்பு கிடைக்கிறது. தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு, ஏற்றுமதி, மோட்டர் வாகனம், தோல் பொருட்கள் உள்ளிட்டவை அதிகரித்துள்ளது.

ஓசூர் நகரத்திற்கான பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு அது நிறைவடையும் நிலையில் உள்ளது. பொருளாதார வளர்ச்சி மையமாக ஓசூரை உருவாக்கப் பல்வேறு கட்டமைப்புகள் செயல்படுத்தப்படுகின்றன. கிருஷ்ணகிரி, தர்மபுரியில் ஒட்டுமொத்த சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது. மதுரை, கோவையைத் தொடர்ந்து திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். கோவையில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *