L Murugan: தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தி பாஜக..வாக்கு வங்கி நிரூபித்துள்ளது!

Advertisements

தமிழகத்தில் ஆளும் அரசின் அதிகார பலம், பணபலத்தை முறியடித்துப் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றியை ஈட்டாவிட்டாலும் அசைக்க முடியாத சக்தி பாஜக என்பதை வாக்கு வங்கி நிரூபித்துள்ளதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, நமது பாசமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் மத்தியில் 3-வது முறையாக ஆட்சியமைக்கும் மகிழ்ச்சியான தருணம் இது. பாஜக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் ஆளும் அரசின் அதிகார பலம், பண பலம், அரசியல் சூழ்ச்சியை முறியடித்துப் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றியை ஈட்டாவிட்டாலும் அசைக்க முடியாத சக்தி என்பதை வாக்குகள்மூலம் நிருபித்துள்ளது. தமிழக மக்கள் பாரத பிரதமர் மோடி அவர்கள்மீது கொண்டுள்ள பெரும் நம்பிக்கையை இது உறுதி செய்துள்ளது. தமிழக மக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றியை உரித்தாக்குகிறேன்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட எனக்குப் பெரும் ஆதரவளித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீலகிரி தொகுதியில் களப் பணியாற்றிய கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள், என்மீது அன்பும், பாசமும் கொண்ட நல் உள்ளங்களுக்கு எனது நன்றி. நீலகிரி தொகுதியிலிருந்து நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகாவிட்டாலும் அதனை எனது தொகுதியாகவே நினைத்துத் தொடர்ந்து பணியாற்றுவேன் என உறுதிபட கூறுகிறேன்.

வளமான தமிழகத்திற்கும், வலிமையான பாரதத்திற்கும் தொடர்ந்து அர்பணிப்புணர்வுடன் பணியாற்றுவோம். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *