
நாட்டின் எரியாற்றல் தேவையில் பாதியைப் புதைபடிவ எரிபொருள் அல்லாதவற்றில் இருந்து எடுக்கும் இலக்கு, ஐந்தாண்டுகளுக்கு முன்கூட்டியே நிறைவேறியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2030ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு நாடும் தங்களின் எரியாற்றல் தேவையில் பாதியைப் புதைபடிவ எரிபொருள் அல்லாத வளங்கள் மூலமாகப் பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டதை மத்திய அமைச்சர் பிரகலாத ஜோசி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு அந்த இலக்கை ஐந்தாண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றியுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மொத்தம் 484 ஜிகாவாட் மின்னாற்றல் பெறுவதற்கான கட்டமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதில் 242 ஜிகாவாட் மின்னாற்றல் புதைபடிவ எரிபொருள் அல்லாத காற்றாலை, சூரிய ஒளிமின், புனல்மின் ஆகிய ஆற்றல் மூலங்களில் இருந்து பெறப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் பிரகலாத ஜோசி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியுள்ளதைப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கோள் காட்டியுள்ளார். பசுமையான நீடித்த எதிர்காலத்தைக் கட்டமைக்கும் முயற்சியை இது எடுத்துக் காட்டுவதாகவும் கூறியுள்ளார்.




