
Kuwait Fire Accident: குவைத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 35 பேர் உயிரிழந்திருக்கலாமெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மங்காப் நகரில் உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வடஇந்தியர் இருவர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
கட்டடத்தில் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகைமூட்டத்தில் சிக்கி பலர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த கே.ஜி. ஆபிரகாம் என்ற தொழிலதிபருக்குச் சொந்தமான கட்டடத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
அந்தக் கட்டடத்தில் மலையாளிகள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கைகுறித்து தகவல் வெளியிட்ட குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம், “ஆபத்தான நிலையில் உள்ள சிலர் உட்பட காயமடைந்த அனைவரும் தேவையான மருத்துவ சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கட்டட தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்கள் தங்களால் இயன்றதை செய்து வருகின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4:30 மணியளவில் சமையலறையில் முதலில் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. தீயைக் கண்டதும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிலர் கீழே குதித்துள்ளனர். அதில் சிலர் மரணம் அடைந்திருக்கின்றனர். மற்றவர்கள், தீக்காயங்களாலும் புகையை சுவாசித்ததாலும் உயிரிழந்திருக்கின்றனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

