
சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் கட்டுப்பட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் இன்று 11 மணியளவில் பிளாட்பார்ம்-1ல் வெடிகுண்டு வெடிக்கும் என கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.
இத்தகவலறிந்த கோயம்பேடு கே11 போலீசார் பேருந்து நிலையத்திற்கு விரைந்து சென்று வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதிலும் சோதனை செய்தனர்.
மேலும் வெளியூருக்கு செல்வதற்காக தயார் நிலையில் இருந்த பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டு மோப்ப நாய்கள் கொண்டு வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த மர்ம நபரின் செல்போன் எண்ணை வைத்து தகவல் தெரிவித்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

