Kovalam Car Accident: புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் லாரியின் பின் மோதியதில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை சென்னை நோக்கி கார் அதிவேகத்தில் வந்துக்கொண்டிருந்தது. கோவளம் அடுத்த செம்மஞ்சேரியில் வந்த போது நின்றுக்கொண்டிருந்த ஈச்சர் லாரியின் பின் பக்கத்தில் பயங்கர மோதியது. இந்த விபத்தில் கார் லாரியின் அடியில் சிக்கி முன்பக்கம் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அப்பகுதியினர் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி லாரியின் அடியில் சிக்கிய காரை ஒருவழியாக மீட்டனர்.
காரில் உடல்நசுங்கி உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்தவர்கள் யார் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.