
“கோடநாடு கொலை” வழக்குபற்றிக் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்தே பேசிக்கொண்டு இருப்பதாகக் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் தெரிவித்தார்…
கோடநாடு கொலை வழக்கு தொடர்பாகக் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “கோடநாடு கொலை” வழக்குபற்றிக் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்தே பேசிக்கொண்டு இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், தான் யாரும் சொல்லிக் கொடுத்துப் பேசவில்லையெனத் தெரிவித்த அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கொங்கணாபுரம் அதிமுக பிரமுகர் ஒருத்தரை வைத்துப் பேரம் பேசியதாகத் தெரிவித்தார்.
கோடநாடு வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை காட்டிக்கொடுக்க வேண்டாம், எவ்வளவு பணம் வேண்டும் என்று அந்த நபர் கேட்டதாகக் குறிப்பிட்டார். பணத்திற்கு ஆசைப்படுபவன் தான் இல்லை என்றும், கோடநாடு பங்களாவில் நடந்த உண்மை வெளிவர வேண்டும் எனக் கூறிய தனபால், இதனைத் தடுக்க கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த முக்கியப்புள்ளி மூலம் பேரம் பேச வந்ததை, பேரம் பேச வேண்டாம் என்று அனுப்பி வைத்ததாகத் தெரிவித்தார்.
மேலும், தனக்கும், தன் மனைவிக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது. தான் பேட்டி கொடுப்பதால் தனது மனைவிக்கும் தன் குழந்தைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தால் அவ்வாறு கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். திருமணமான 23 ஆண்டுகளாக எந்தப் பிரச்னையும், கருத்து வேறுபாடும் கிடையாது எனத் தெரிவித்த அவர், கடந்த 10 நாள்களுக்கு முன்பு தனது மனைவி குழந்தைகளுடன், அவரது தாயார் வீட்டிற்குச் சென்றுவிட்டாரெனக் கூறினார்.
அதற்குக் காரணம் குழந்தைகளுக்குப் பள்ளி தேர்வு நடப்பதாகவும், ஒரு குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவரது தாய் வீட்டிற்கும், பள்ளிக்கும் தூரம் மிகவும் குறைவு. இதனால் தான் அவர் அங்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தூண்டுதல்பேரில், முக்கியமான நபர் ஒருவர் தனது மனைவியிடம் பேசி, புகார் கொடுக்க வைத்துள்ளாரெனக் குற்றம் சுமத்தினார்.
தொடர்ந்து, சிபிசிஐடி விசாரணையில் தான் ஆஜராகாமல் இருக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக வரும் 14ஆம் தேதி சம்மன் வந்துள்ளது என்றும் பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால் நாளையே தன்னை விசாரிக்கச் சம்மன் அனுப்ப வேண்டும் என்று சிபிசிஐடி போலீசாரை தான் கேட்டுக்கொள்வதாகவும், தன் உயிருக்கு ஆபத்து உள்ளது, நாள்கள் கடந்து போகபோக, வழக்கு நீர்த்து போய் வருகிறது எனத் தெரிவித்தார்.
மேலும், பேசிய அவர், கோடநாடு வழக்கு தொடர்பாக அப்போதைய விசாரணை அதிகாரி, ஐ.ஜி. சுதாகர் மற்றும் சேலம் எஸ்பி-யாக இருந்த இருவரும் எடப்பாடி பழனிசாமியிடம் விலை போய்விட்டதாகச் சாடினார். இவர்கள் அனைவரும் சேர்ந்து தான், தன்னை கடுமையாகத் தாக்கியதாகவும், கோடநாடு வழக்கில் எவ்வளவு பணம் வேண்டும் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்னதாகக் கூறி அதிமுக பிரமுகர் பேரம் பேசியதாகத் தெரிவித்த அவர், எடப்பாடி பழனிசாமி பற்றித் தன்னிடம் பேச வேண்டாம் என்று கூறி அனுப்பி விட்டதாகத் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் தான் தனக்கும், தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றார். குறிப்பாக, தனது மனைவி பயத்திற்கு காரணம், தங்களுக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளனர், தந்தை இல்லாமல் போனால் அவர்கள் நிலை என்னவாகும் என்று தான், தனது மனைவி பயப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கோவையில் சிபிசிஐடி அதிகாரிகளிடம் விசாரணையின்போது ஆஜராகி அனைத்து உண்மைகளையும் சொல்வதாகவும், புகார் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்த அவர், தனது மனைவியைத் தூண்டிவிட்டு, தன் மீது புகார் கொடுப்பதால் தன்னை காவல் துறை கைது செய்துவிடும் சூழல் உள்ளது எனக் கூறினார்.
இதனால் கோடநாடு வழக்கில் விசாரணையில் தான் ஆஜராகாமல் தள்ளிப் போகும் சூழ்நிலை ஏற்படும் எனத் தெரிவித்தார்.
முன்னதாகச் சேலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனபாலின் மனைவி, தனபால் மீது புகார் அளித்துள்ளார்.
அதில், தனது கணவர் தன்னை தாக்குவதாகக் கூறி உள்ளார்.
மேலும், அவரது தாக்குதலின் பேரில் தான் தனது குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்குச் சென்றதாகத் தனபாலின் மனைவி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


