Advertisements

கொடைக்கானலில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 5 நாட்களாக தினந்தோறும் விட்டு விட்டு கொடைக்கானல் மலைப்பகுதிகள் பரவலாக மழை பெய்தது. இதில், குறிப்பாக காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் நண்பகல் வேளையில் திடீரென வானிலை மாறி பரவலாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.
பேருந்து நிலையம்,ஏரிச்சாலை, நாயுடுபுரம், மூஞ்சிக்கல், செண்பகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் தண்ணீர் தட்டுபாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வேடந்தவாடி, கருமாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காலை முதலே கடும் வெயில் நிலவி வந்த நிலையில், தற்போது பெய்த மழையால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்த மழை நெல், வேர்க்கடலை உள்ளிட்ட விவசாயப் பயிர்களுக்கும், காய்கறி, பூ உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
Advertisements




