
இந்தியா – நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம், வளமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பதிவில், இன்று கையெழுத்திடப்பட்ட இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், நமது வளர்ச்சிக் கூட்டாண்மைக்கு முன்னெப்போதும் இல்லாத உத்வேகத்தை அளிக்கும் என்பதில் தான் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.
இது நமது இரு நாடுகளையும் பிணைக்கும் ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் இலட்சியத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த ஒப்பந்தம் நமது விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கைவினைஞர்கள் மற்றும் புதுமையாளர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும். இது வளர்ச்சிக்குப் புதிய வழிகளைத் திறந்து, வாய்ப்புகளை உருவாக்கி, பல்வேறு துறைகளில் நமது ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தும் என்று கூறினார்.
மேலும், நியூசிலாந்தின் 20 பில்லியன் டாலர் முதலீட்டு உறுதிப்பாடு, விவசாயம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் வளமான மற்றும் ஆற்றல்மிக்க எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.





