Advertisements

அரசாங்கமே பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கார் வழங்குவது அவசியமா? என்று திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் வினவியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் என்ற அளவில் தொகுதி மேம்பாட்டு நிதி கிடைக்கிறது என்றால், ஐந்து ஆண்டுகளில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதிக்கு கணிசமான நிதியை நேரடியாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.
தற்போது அரசாங்கமே பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகச் சொல்கிறது அப்படியிருக்கும்போது, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுவாக கார், உதவியாளர், சம்பளம், பெட்ரோல் மானியம் போன்ற சலுகைகளை வழங்குவது அவசியமா? என்று வினவினார். பெரிய அளவிலான சொத்துகளையும், வாகனங்களையும் வைத்திருக்கும் ஒருவருக்கும், உண்மையில் வாகன வசதி இல்லாத ஒருவருக்கும் ஒரே மாதிரியான சலுகை வழங்குவது சரியான அணுகுமுறையா? என்று கேள்வி எழுப்பினார்.
எனவே, தேவைப்படுகிற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் உதவி வழங்கும் முறையை உருவாக்கலாம் என்று கூறினார். மேலும், முந்தைய ஆட்சியினர் கஜானாவை காலி செய்துவிட்டுச் சென்றார்கள், கடுமையான நிதிச்சுமையை விட்டுச் சென்றார்கள் என்று கூறிக்கொண்டிருக்கும் அரசாங்கமே, இப்போது இப்படிப்பட்ட புதிய செலவினங்களை அறிவிக்கும்போது, அது இரட்டை நிலைப்பாடாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Advertisements



