வாகனம் வழங்கும் அறிவிப்பைத் திரும்பப் பெறுக : டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்.!

Advertisements

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் வாகனமும், ஓட்டுநருக்கும், வாகனப் பராமரிப்பிற்காகவும் மாதந்தோறும் ரூபாய் 75 ஆயிரமும், உதவியாளருக்கு ரூபாய் 25 ஆயிரமும் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் ஜோசப்விஜய்யின் அறிவிப்பு,

கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போன்ற செயலாகும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர், ஏற்கனவே சொந்தமாக வாகனம் வைத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு கூடுதலாக அரசு சார்பில் கார் வழங்குவதும், மாதந்தோறும் ரூபாய் 75 ஆயிரம் வாகனப் பராமரிப்புத் தொகையாக வழங்குவதும் அரசிற்கு அவசியமற்ற கூடுதல் செலவாகவே பார்க்க வேண்டியுள்ளது எனவும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளாக இருந்து, த.வெ.க. சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சில உறுப்பினர்களுக்கு, கார் வழங்க வேண்டும் என்றால், முதலமைச்சர் ஜோசப்விஜய் தனது சொந்த செலவிலோ, அல்லது கட்சி செலவிலோ வழங்கலாமே என்ற கேள்விதான் தற்போது அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது எனவும், தமிழக அரசின் கஜானா காலியாக இருப்பதாகவும், சுமார் ரூபாய் 13 லட்சம் கோடி கடனில் இருப்பதாகவும் வெள்ளை அறிக்கை வெளியிட்டதோடு,

நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமலும், தேர்தல் அறிக்கையில் சொல்லிய இலவசங்களை செயல்படுத்த முடியாத த.வெ.க. அரசிற்கு, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்கள் வாங்குவதற்கு மட்டும் நிதி எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பிய அவர், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *