Kilambakkam Bus Terminus: புதிய சிஇஒ நியமனம்!

Advertisements

கிளாம்பாக்கத்தில் பயணிகளுக்குச் சிக்கல் எதுவுமின்றி பேருந்துகள் இயக்கப்படுகிறதா? வசதிகள் முறையாக உள்ளதா? என்பது உள்ளிட்ட பணிகளை சிஇஒ மேற்கொள்வார்.

சென்னை: தொழில் மற்றும் வேலை நிமித்தமாக வெளியூர்களில் இருப்பவர்கள் பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பொங்கலை கொண்டாட நேற்றே பயணத்தைத் தொடங்கிவிட்டனர்.

சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புதிதாகக் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்குப் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய வசதிகள் செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டுப் பேருந்து நிலையத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள வசதிகள்குறித்து ஆய்வு செய்தார்.

இதனிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சிஇஒ நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையரக இணை இயக்குனர் பார்த்தீபன் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய சிஇஒ-வாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிளாம்பாக்கத்தில் பயணிகளுக்குச் சிக்கல் எதுவுமின்றி பேருந்துகள் இயக்கப்படுகிறதா? வசதிகள் முறையாக உள்ளதா? என்பது உள்ளிட்ட பணிகளைச் சி.இ.ஒவாக நியமிக்கப்பட்ட பார்த்தீபன் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *