kerala mpox:எத்தனை அடி வாங்குறது… அப்போ நிபா, இப்போ குரங்கம்மை..!

Advertisements

திருவனந்தபுரம்; கேரளாவில் குரங்கம்மை பாதிப்பு அறிகுறிகளுடன் ஒருவர் கோழிக்கோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

காய்ச்சல்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் பெங்களூருவில் கல்லூரி ஒன்றில் படித்துக் கொண்டிருந்த 24 வயது இளைஞர் காய்ச்சல் காரணமாகப் பலியானார். மருத்துவ பரிசோதனையில் அவர் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

கட்டுப்பாடு

இதையடுத்து, அவர் வீடு, வசிக்கும் பகுதி, குடியிருக்கும் வார்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள் தீவிர கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் முன் எடுக்கப்பட்டது. பல்வேறு கடும் கட்டுப்பாடுகளும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

கடந்த ஜூலையில் இதே போன்று 14 வயது மாணவர் நிபா வைரசால் பலியானார். 2 உயிரிழப்புகள் நிபா தொற்றால் ஏற்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சியாகக் குரங்கம்மை பாதிப்பு அறிகுறிகளுடன் ஒருவர் கோழிக்கோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது.

அறிகுறிகள்

38 வயதான அவர், மலப்புரம் மாவட்டம் எடவண்ணா பகுதியைச் சேர்ந்தவர். கடுமையான காய்ச்சல் எதிரொலியாக அவர் மஞ்சேரியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்தபோது குரங்கம்மை அறிகுறிகள் இருப்பதாகச் சந்தேகம் எழுந்தது.

ஊர் திரும்பியவர்

உடனடியாக அங்கிருந்த மருத்துவ நிபுணர்கள் அவரைக் கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு விரிவான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. அவருக்குக் குரங்கம்மை பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்த மருத்துவ நிபுணர்கள் ஆய்வு முடிவுகளுக்குக் காத்திருப்பதாகக் கூறி உள்ளனர். பாதிக்கப்பட்ட நபர், ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து கடந்த வாரம் தான் ஊர் திரும்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *