
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல் அரசு மரியாதை இன்றி மிகச் சாதாரணமாக அவர் விரும்பியபடி அடக்கம் செய்யப்பட்டது.
கேரள மாநிலத்தில் இருமுறை முதல்வராக இருந்தவர் உம்மன் சாண்டி. மிகவும் எளிமைக்குச் சொந்தக்காரரான இவர் கடந்த 1970-ம் ஆண்டு முதலே, கடந்த 12 தேர்தல்களாக புதுப்பள்ளி சட்டசபைத் தொகுதியில் வென்றவர். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கும் புதுப்பள்ளி என்றே பெயர் வைத்து இருந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த உம்மன் சாண்டி நேற்று முன்தினம் உயிர் இழந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடந்தது. இதில் அரசு மரியாதை எதுவும் செலுத்தப்படவில்லை. வழக்கமாக முன்னாள் முதல்வர்கள் இறக்கும்போது அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்படுவது வழக்கம்.
உம்மன் சாண்டி முன்னாள் முதல்வர் என்பதால் அவரது உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யவே கேரள அரசு முடிவு செய்தது. ஆனால், தான் மறைந்தபின் சாதாரண மனிதரைப் போல அரசு மரியாதையின்றி தனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று உம்மன் சாண்டி விருப்பம் தெரிவித்திருந்தார். இதை அவரது குடும்பத்தினர் கேரள அரசிடம் தெரிவித்தனர். இதை ஏற்று உம்மன் சாண்டியின் உடல் அவரது விருப்பப்படி கோட்டயம் மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

